உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
வி.ஆர்.சுகுமார், மாவட்டச் செயலர், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம், சிவகங்கையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 1964ல், நான், சிறுவனாக இருந்தபோது, மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவில் முன், நண்பர்களுடன் கோலிக்குண்டு விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது, வேட்டி - சட்டை அணிந்த ஒருவர், கோவிலுக்கு, சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவருடன், ஒரே ஒரு காவலர் மட்டுமே வந்தார். எங்களை யாரும், விலகி போகச் சொல்லவில்லை.அவர், வேறு யாருமல்ல... அப்போது, முதல்வராக பொறுப்பேற்றிருந்த, பக்தவச்சலம் தான். இப்போது அதை நினைத்தாலும், நெகிழ்ச்சியாக இருக்கிறது.
பத்து ஆண்டுகள் அமைச்சராக இருந்த கக்கன், ஆட்சி மாறியதும், பேருந்தில் பயணம் செய்தார். அவருக்கென, எந்த சொத்தும் இல்லை. அரியலுாரில் நடந்த ரயில் விபத்துக்கு, தார்மீக பொறுப்பேற்று, ரயில்வே அமைச்சர் பதவியை, லால்பகதுார் சாஸ்திரி ராஜினாமா செய்தார். அவர் பிரதமராக இருந்தபோது, வங்கியில் கடன் பெற்று தான், கார் வாங்கினார். அக்கடனை அடைக்கும் முன், அவர் உயிரிழந்தார். அதன் பின், அவரின் மனைவி, தனக்கு கிடைத்த ஓய்வூதியத்தில், அந்தக் கடனை அடைத்தார்.
ரயில்வே அமைச்சராக இருந்தபோதும், எளிமையைக் கடைபிடித்தவர், மதுதண்டவதே. பிரதமர் பொறுப்பேற்றதும், விலைவாசியை குறைத்துக் காட்டியவர், மொரார்ஜி தேசாய். இந்தியாவை ஒன்றிணைத்தவர், வல்லபபாய் பட்டேல். 'பொக்ரான்' அணுகுண்டு சோதனை நடத்திக் காட்டியவர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய்.

இப்படி எத்தனையோ நல்ல தலைவர்களை, இந்நாடு கண்டதுண்டு; ஆனால், அவர்களின் வாரிசுகளை யாருக்கும் தெரியாது.இன்றைய தலைவர்கள், வாரிசு அரசியலை முன்னெடுக்கின்றனர். காரணம் அவர்கள், கட்சியை, கம்பெனியாக நடத்துகின்றனர்; அதனால், தனக்கு பின், தன் வாரிசு தான், கட்சியை நிர்வகிக்க வேண்டும் என, நினைக்கின்றனர்.நம் தேசத்தை, வாரிசு அரசியல் தான் கெடுக்கிறது என்றால், அது மிகையல்ல.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE