புதுச்சேரி : உப்பளம் தொகுதியில் மின்சாரம் தாக்கி சிகிச்சை பெறும் சிறுவனுக்கு, ஆபத்து ஏற்பட்டால், அரசும், போராட்டக்காரர்களும் முழு பொறுப்பேற்க வேண்டும் என அன்பழகன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:மின்துறையை தனியார் மயமாக்குவதை ஆரம்பத்திலே அ.தி.மு.க. எதிர்த்தது. ஊழியர்களின் போராட்டம், மக்கள் நலனை கருத்தில் கொண்டு அமைக்க வேண்டும். புயல் மழை நேரத்தில், போராட்டம் என்பது தவறானது. அத்தியாவசியமான மின்துறை ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம், சட்ட விரோதம். போராட்டத்தை தி.மு.க., -காங்., கட்சிகள் அரசியல் ரீதியில் துாண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறது.மின்துறை போராட்டத்தால், உப்பளம் தொகுதி ஏனாம் வெங்கடாசலபிள்ளை வீதியில், மின் உயர் அழுத்தம் காரணமாக மின்சாரம் தாக்கி, 14 வயது சிறுவன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அரசும், மின்துறை போராட்ட குழுவனருமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
கடந்த 5 நாட்களாக உப்பளம், பாண்டியன் வீதி, ஏனாம் வெங்கடாசல பிள்ளை வீதி, இஞ்ஞாசி மேஸ்திரி வீதி, தாவீதுபேட், வாணரப்பேட்டை, திப்புராயப்பேட்டை, நேதாஜி நகர் உள்ளிட்ட பல இடங்களில் மின்கம்பிகள் அறுந்தும், சில இடங்களில் மின்சார ஒயர்கள் எரிந்தும் முழுமையாக மின்தடை ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்துறையில் பிரதான சங்கம் வைத்திருக்கும் தி.மு.க., சங்க ஊழியர்கள் மூலம், மக்களுக்கு தேவையற்ற தொல்லைகள் கொடுத்து வருகிறது. இந்த விஷயத்தில் கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE