புதுச்சேரி : முறைகேடான சான்றிதழ் கொடுத்து மருத்துவப்படிப்பில் சேர இருப்பதை தடுக்க மாணவர்களின் விலாசத்துடன் தரவரிசைப் பட்டியலை வெளியிட வேண்டும் என சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து நலச்சங்க தலைவர் நாராயணசாமி, பொருளாளர் நாகராஜன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரி மாநிலத்திலுள்ள சென்டாக் நிர்வாகம் கடந்த 4ம் தேதி மாணவர்களின் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அவற்றில் தேசிய மருத்துவ கழகம் வெளியிட்ட தரவரிசை பட்டியலில் உள்ள சில மாணவர்களின் பெயர்கள் விடுபட்டு, புதிதாக சில மாணவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களுக்கும் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, சென்டாக் நிர்வாகம் இந்த பட்டியலில் உள்ள அனைத்து மாணவர்களின் முகவரியும் வெளியிட வேண்டும்.
புதுச்சேரியில் மருத்துவம் படிப்பதற்காக வெளிமாநில மாணவர்கள் முறைகேடாக ஒவ்வொரு ஆண்டும் சேர்ந்து வருகின்றனர். இவர்களை ஆய்வு செய்யவே, விலாசத்துடன் கூடிய தரவரிசை பட்டியலை வெளியிட வேண்டும் என்று மாணவர்கள் நலன் கருதி கேட்டுக் கொள்கிறோம்.மேலும், இதுதொடர்பாக, கவர்னர், முதல்வர், தலைமை செயலர், கலெக்டர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE