புதுச்சேரி : முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து தங்களது போராட்டத்தை தற்காலிகமாகவாபஸ் பெறுவதாக மின்துறை போராட்டக்குழு அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் மின்சார வினியோகம் தனியார் மயமாக்கப்படும் என மத்திய அரசு கடந்த மே மாதம் அறிவித்தது. மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்துறையில் பணியாற்றும் பொறியாளர்களும், ஊழியர்களும் ஒருங்கிணைந்து தனியார் மய எதிர்ப்பு போராட்டக் குழுவை ஏற்படுத்தினர்.தனியார்மய முடிவை கைவிட வலியுறுத்தி, கடந்த மே மாதத்தில் தொடர் போராட்டத்தை துவக்கினர். மத்திய அரசின் முடிவுக்கு புதுச்சேரி அரசும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
மேலும், மின் வினியோகத்தை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால், மின்துறை ஊழியர்களும், பொறியாளர் களும் தங்களது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.இந்நிலையில், தனியார் மயத்துக்கு முன்னோட்டமாக மின் வினியோகத்திற்கான வரைபடங்களை தயாரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம், புதுச்சேரி அரசின் தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியது. மேலும், மின் வினியோகத்தை தனியார் மயமாக்குவதற்கான பணிகளை ஒருங்கிணைப்ப தற்காக ஆலோசகர் ஒருவரை அனுப்புவதாக மின்சார அமைச்சகத்தில் இருந்து கடிதம் வந்தது.
அதிர்ச்சி அடைந்த மின்துறை போராட்டக் குழுவினர், கடந்த 4ம் தேதியில் இருந்து மீண்டும் போராட்டத்தை துவக்கினர்.'புரெவி' புயலால் கனமழை பெய்து வந்த சூழலில் பல இடங்களில் மின் வினியோகம் தடைபட்டது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள், மின்சார இணைப்பை மீண்டும் வழங்குவதற்கு வரவில்லை.பல பகுதிகள் இருளில் மூழ்கியதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இதனால், தி.மு.க., - அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மின்துறை அலுவலக வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பல இடங்களில் சாலை மறியல் நடந்ததால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது.
இந்நிலையில், மின்துறை போராட்டக் குழுவினரை அழைத்து முதல்வர் நாராயணசாமி நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் நடந்த பேச்சுவார்த்தையில் மின்துறை செயலர் தேவேஷ் சிங், மின்துறை, கண்காணிப்பு பொறியாளர் முரளி மற்றும் போராட்டக் குழுவின் தலைவர் ராஜேந்திரன், மதிவாணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண் டனர்.வரும் ஜனவரி மாதத்தில் தனது தலைமையில் மின்துறை அமைச்சர் கமலக்கண்ணன், மின்துறை செயலர், கண்காணிப்பு பொறியாளர் மற்றும் போராட்டக்குழு நிர்வாகிகளை உள்ளடக்கிய குழுவினருடன் டில்லி செல்வது என்றும், மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கை நேரில் சந்தித்து நமது கருத்தை வலியுறுத்தலாம் என முதல்வர் உறுதியளித்தார்.
அதுவரை, ஆலோசகரை அனுப்பும் முடிவை நிறுத்தி வைக்குமாறு மத்திய மின்துறை அமைச்சருக்கு உடனடியாக கடிதம் அனுப்பப்படும் என்றும் முதல்வர் உறுதியளித்தார். பேச்சுவார்த்தையை தொடர்ந்து, முதல்வர் அலுவலகத்தில் இருந்து மத்திய மின்துறை அமைச்சருக்கு நேற்று மாலையே கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்டக் குழுவின் தலைவர் ராஜேந்திரன் கூறும்போது, 'பேச்சு வார்த்தையில் முதல்வர் அளித்த வாக்குறுதியை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைக்கிறோம்' என தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE