புதுச்சேரி : பந்த் போராட்டம் காரணமாக, புதுச்சேரியில் நேற்று கடைகள் மூடப்பட்டன; பஸ்கள் இயக்கப்படாததால், மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
டில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் புதுச்சேரியில் பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போராட்டத்துக்கு காங்., - தி.மு.க., - இந்திய கம்யூ., - மா.கம்யூ., - வி.சி., உள்ளிட்ட கட்சிகளும், தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்து இருந்தன. பந்த் காரணமாக, புதுச்சேரியில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் நேற்று திறக்கப்படவில்லை. பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.
வாகன நடமாட்டம் குறைந்ததால் நேரு வீதி, காந்தி வீதி, அண்ணா சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. ஆட்டோ, டெம்போக்களும் இயங்கவில்லை. தமிழக அரசு பஸ்கள் காலையில் புதுச்சேரிக்குள் வந்தன. பின், புதுச்சேரியின் எல்லையான கோரிமேடு, மதகடிப் பட்டு, கனகசெட்டிக்குளம், கன்னியக்கோவில் ஆகிய இடங்களில் நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டு சென்றன. இதனால், பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.
தனியார் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. சினிமா தியேட்டர்களில் பகல் காட்சி ரத்து செய்யப்பட்டது. தொழிற்பேட்டைகளில் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருந்தன. அரசு அலுவலகங்கள் இயங்கினாலும் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களே வந்திருந்தனர்.776 பேர் கைதுபுதுச்சேரி பஸ் நிலையம், ராஜா தியேட்டர் சிக்னல், வில்லியனுார், மதகடிப்பட்டு, திருக்கனுார் உள்ளிட்ட 8 இடங்களில் பல்வேறு அரசியல் கட்சியினரும், தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
இதுதொடர்பாக 776 பேரை போலீசார் கைது செய்தனர்.பந்த் காரணமாக, நகரின் பிரதான சாலைகளிலும், முக்கிய சந்திப்புகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காரைக்கால்காரைக்கால், நெடுங்காடி, திருப்பட்டினம், திருநள்ளார் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் இயங்கவில்லை. இதனால், பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. அரசு அலுவலகங்கள், பெட்ரோல் பங்குகள், மீன் மார்க்கெட்டுகள் வழக்கம் போல் இயங்கின.
தி.மு.க., 'மிஸ்சிங்'விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த பந்த் போராட்டத்திற்கு, தி.மு.க. ஆதரவு அளிப்பதாக தெரிவித்தது. ஆனால், புதுச்சேரியில் நேற்று நடந்த மறியல் போராட்டங்களில் ஆளும் காங்., கட்சி மற்றும் கூட்டணியில் உள்ள இதர கட்சிகள் கலந்து கொண்டது. ஆனால், பிரதான கட்சியான தி.மு.க., பங்கேற்கவில்லை. இது, தி.மு.க., காங்., கூட்டணியில் உள்ள விரிசலை உறுதிப் படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE