புதுச்சேரி : லாஸ்பேட்டை தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து சபாநாயகர் சிவக்கொழுந்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என முன்னாள் எம்.எல்.ஏ., வைத்தியநாதன் சவால் விட்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை:லாஸ்பேட்டை தொகுதியில் கடந்த நான்கரை ஆண்டுகள், எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தாத சபாநாயகர் சிவக்கொழுந்து, தேர்தல் நெருங்கும் நேரத்தில், அவசரமாக அவர் செய்ய கூடிய செயல்களை சுட்டி காட்டிய என்னை கபட வேடதாரி என்கிறார்.தேர்தலின் போது, 12 பொருட்கள் கொடுக்கிறேன் என கூறி மக்களிடம் ஆசை வார்த்தை கூறி ஓட்டு வாங்கிய அவர் கபட வேடதாரியா?, சுயேச்சையாக நின்று 2வது இடத்திற்கு வந்த நான் வேடதாரியா?அரசியலில் என் சொந்த பணத்தை இழந்தேன் தவிர, அரசியலை வைத்து தொழில் செய்து பிழைப்பு நடத்தவில்லை. சிவக்கொழுந்து, சபாநாயகர் பதவியை எப்படி வாங்கினார் என அவரது கட்சி சீனியர்களுக்கு தெரியும். மடுவுபேட் பகுதியில் பட்டா வழங்க அனைத்து நடவடிக்கைகளை நான் செய்த பிறகு, ஆட்சிக்கு வந்தவுடன் இவர் செய்ததாக கூறுவது, காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதையாக உள்ளது.
தொகுதி பக்கம் வராத சிவக்கொழுந்து, என்னை பார்த்து எங்கு இருக்கிறார், எந்த கட்சியில் இருக்கிறார் என கேட்கிறார். கடந்த சட்டசபை தேர்தலில், என்.ஆர்.காங்., கட்சியில் சீட் கிடைக்காமல் போனதற்கு சில அரசியல் வியாபாரிகளே காரணம். இருந்தும் நான் செய்த மக்கள் பணியை மனதில் நிறுத்தி, சுயேட்சையாக போட்டியிட்ட எனக்கு 2ம் இடத்தை மக்கள் தந்தனர். நான் பதவி சுகத்திற்கோ, சீட்டுக்காவோ அலைபவன் அல்ல.என்.ஆர்.காங்., தலைவர், கடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது, வைத்தியநாதனுக்கு சீட் கொடுத்திருந்தால், காங்., ஆட்சி அமைத்திருக்காது என கூறியது சபாநாயகருக்கு தெரியும்.
நான் எம்.எல்.ஏ.,வாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், நான் அமைத்துள்ள கமலா அறக்கட்டளை மூலம் இலவச தட்டச்சு பயிற்சி, தையல் பயிற்சி, தேர்வில் சாதித்த 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த 10 ஆண்டுகளாக ஊக்க பரிசு வழங்கி வருகிறேன். லாஸ்பேட்டை துணை மின் நிலையம் அமைய, சட்டசபையில் பல முறை கேள்வி எழுப்பி, செயல்திட்டமாக கொண்டுவர நான் பாடுப்பட்டேன். ஆனால், சபாநாயகரால் முடிந்ததுபோல் கபடவேடம் போடுகிறார். என்றாவது ஒரு நாள் எம்.எல்.ஏ., அலுவலகம் வந்து, போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு செல்கிறார். இவர் பதவிக்கு வந்த நான்கரை ஆண்டு காலத்தில், லாஸ்பேட்டையில் வெறும் பூமி பூஜை மட்டுமே நடந்துள்ளது தவிர, திட்டங்களுக்கான எந்தவொரு ஆயத்த பணிகளும் நடைபெறவில்லை.என்.ஆர்.காங்., ஆட்சியில் நான் செய்த பணிகளும், தற்போது சிவக்கொழுந்து செய்துள்ள பணிகள் குறித்து, நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE