ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், பொது வேலை நிறுத்தம் பிசுபிசுத்ததால், வாகனங்கள், கடைகள் இயங்கியதுடன், மக்களின் வாழ்க்கை பாதிப்பில்லை.
வேளாண் சட்டத்தை திரும்ப பெறுதல், டில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தரும் வகையில், நேற்று நாடு முழுதும் பொது வேலை நிறுத்தம் நடந்தது. ஆனால், ஈரோடு மாவட்டத்தில் போராட்டம் பிசுபிசுத்தது. ஈரோட்டில் நேற்று முழு அளவில் கடைகள் திறந்திருந்தன. அனைத்து பஸ்கள், லாரி, வேன், கார், ஆட்டோக்கள் இயங்கின. சில தொழிற்சங்கம் சார்புடைய ஆட்டோ, கடைகள் செயல்படவில்லை. ஈரோடு வ.உ.சி., மார்க்கெட் காய்கறி வியாபாரிகள், முழு அடைப்பை அறிவித்து, கடையை மூடினர். ஆனால், கனி மார்க்கெட் உட்பட ஜவுளி சந்தை, குடோன், நகைக்கடை, மருத்துவமனை உள்ளிட்ட அனைத்தும் வழக்கம் போல செயல்பட்டன. இருப்பினும், மக்களின் இயல்பு வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை.
3 இடங்களில் 100 சதவீத ஆதரவு: சென்னிமலையில் பால், மருத்து கடைகளை தவிர, வேறெந்த கடைகளும் திறக்கவில்லை. தினசரி காய்கறி மார்க்கெட் உட்பட, அனைத்து இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டு, 100 சதவீத ஆதரவு தெரிவித்தனர். பெருந்துறையில் காய்கறி மார்க்கெட், கடைகள் அடைக்கப்பட்டன. நகர் பகுதியில் மட்டும் கடைகள் திறந்திருந்தன. இதேபோல், புன்செய்புளியம்பட்டி, சத்தியமங்கலத்தில் மருந்து கடைகள் தவிர, வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட, 100 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பவானிசாகர் பகுதியில், 200 கடைகள் அடைக்கப்பட்டன. கோபி டவுன் கடைவீதிகளில், அனைத்து கடைகளும் மூடப்பட்டன. பவானியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதனால் மேட்டூர் சாலை, ஈரோடு சாலை, அந்தியூர் பிரிவு சாலைகள், மக்கள், வாகன நடமாட்டமின்றி வெறிச்சோடின. மொடக்குறிச்சி நால்ரோடு பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE