60 நாளில் ஆங்கிலம் கற்பது போல, கட்சி தொடங்குகிறார் ரஜினி. ரஜினிகாந்த், ஓர் அழுத்தம் காரணமாகவே கட்சி துவங்குகிறார். மக்களை அறிவு கெட்ட கூட்டம் என நினைக்கிறார். ரசிகர் மன்றத்தில் இருந்து ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒருவர் கூடவா இல்லை?
- நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
'ரஜினியை சீண்டுவதே, உங்களுக்கு வேலையாக போய் விட்டது; அவர் நினைப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது; மைக் கிடைத்தால், எதையும் பேசி விடுவதா...' என, காட்டமாக கூறத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு.
மதசார்பற்ற ஜனதா தளம், தி.மு.க., போன்ற கட்சிகள், திருவள்ளுவர் சிலையை, துணிபோட்டு நீண்ட காலமாக மூடி வைத்திருந்தன. அதன் மூலம் திருவள்ளுவரை அவதுாறு செய்தன. பா.ஜ., தான், திருவள்ளுவர் சிலையை திறந்ததுடன், கர்நாடகாவின் சர்வாக்கியருக்கும் முக்கியத்துவம் கொடுத்தது.
- தமிழக பா.ஜ., பொறுப்பாளர் சி.டி.ரவி
'திருவள்ளுவர் சிலையை திறந்தீங்க; வள்ளுவரின் திருக்குறளை, கன்னட அரசியல் தலைவர்களுக்கு சொல்லிக் கொடுத்தீர்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொறுப்பாளர் சி.டி.ரவி அறிக்கை.
இன்னும் நான்கு மாதங்கள் தான், முதல்வர் இ.பி.எஸ்., கோட்டை வராண்டாவில் சுற்றலாம். அதன்பிறகு, நடுரோட்டில் வந்தாலும் கூட, யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். கோட்டையில் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும்.
- தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன்

'மல்லாக்க படுத்து, விட்டத்தை பார்த்தபடி, தி.மு.க.,வினர் கனவு காண்கின்றனர் என்று, அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் பேச்சு.
தமிழகத்தில் இப்போது விலைவாசி உயரவில்லை; 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கிறது; ஜாதி, மதச் சண்டைகள் இல்லை; சட்டம் - ஒழுங்கு சீராக உள்ளது. எனவே, எத்தனை ஆண்டுகள் ஆனாலும், தி.மு.க.,வால் ஆட்சிக்கு வர முடியாது.
- தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசன்
'உண்மை தான். மக்களுக்கு ஒப்பிட்டுப் பார்க்கும் திறன் உள்ளது. ஓட்டு போடும் போது, சிந்தித்து செயல்படுவர்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேச்சு.
தமிழகம் எதற்கும், எவருக்கும் தலைவணங்காத மாநிலமாக இருந்தது. அதை, இந்த, இ.பி.எஸ்., அரசு, பிச்சை பாத்திரம் ஏந்தி, பிரதமர் மோடியிடம் அடிமை ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்; தி.மு.க., அரசு அடுத்து அமைய வேண்டும்.
- தி.மு.க., துணை பொதுச் செயலர் ராசா
'நீங்கள் சொல்வதும் நடக்கவில்லை; விரும்புவதும் நடக்கப் போவதில்லை என்பதே, மக்கள் கருத்தாக உள்ளது...' என, கூறத் தோன்றும் வகையில், தி.மு.க., துணை பொதுச் செயலர் ராசா பேச்சு.
தமிழ் கல்வெட்டுகளுக்கான இயக்குனரகத்தை, தற்போதுள்ள மைசூரிலிருந்து மாற்றி, மீண்டும் தமிழகத்தில் அமைக்க வேண்டும்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்
'தமிழ் கல்வெட்டுகளை ஆராய, மைசூருக்குத் தான் போக வேண்டுமா; இது கூட, தமிழகத்தில் இருக்கக் கூடாதா...' என, ஏக்கம் தெரிவிக்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE