சேலம்: சேலத்தில், வேளாண் சட்டத்துக்கு எதிராக, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில், 28 பெண்கள் உள்பட, 452 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து, நாடு தழுவிய ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு, நேற்று அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு, தி.மு.க., - காங்., - கம்யூ., உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. எனினும், சேலம் மாவட்டத்தில், அனைத்து போக்குவரத்தும் வழக்கம் போல செயல்பட்டன. பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. இயல்பு வாழ்க்கையில், எந்தவித மாற்றமும் இல்லை. அதே நேரம், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சேலம், நாட்டாண்மை கழக கட்டடம் முன், காலை, 10:00 மணி முதல், கட்சியினர், அமைப்பினர் வர துவங்கினர். தி.மு.க., - காங்., - இ.கம்யூ., மார்க்.கம்யூ., - மக்கள் நீதி மையம், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஏ.ஐ.டி.யு.சி., - சி.ஐ.டி.யு., எச்.எம்.எஸ்., தொழிற்சங்கத்தினர், அனைத்திந்திய மாதர் சங்கத்தினர், அடுத்தடுத்து திரண்டனர். காலை, 11:00 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வேளாண் சட்டத்தை திரும்ப பெறவும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷமிட்டனர். போலீஸ் துணை கமிஷனர் சந்திரசேகரன், பொதுமக்களுக்கு இடையூறு இன்றி போராட்டம் நடத்த வேண்டும் என, மைக்கில் அறிவுறுத்தினார். அதை பொருட்படுத்தாத கட்சியினர், அமைப்பினர், மறியலுக்கு முயன்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், 'பேரிகார்டு' கொண்டு தடுத்தும், முடியவில்லை. கட்டுப்பாட்டை மீறி, வெகுண்டெழுந்து, எல்லா திசைகளிலும் திமிறி சென்று சாலையில் அமர்ந்து, மறியல் செய்தனர். அதனால், கலெக்டர் அலுவலக சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் அனைத்தும் நகர முடியாமல் ஸ்தம்பித்தது. மறியலில் ஈடுபட்ட, 28 பெண்கள் உள்பட, 452 பேரை போலீசார் கைது செய்தனர்.
* சேலம் மாவட்டம், மாநகரில் வழக்கம் போல், அரசு, தனியார் பஸ்கள், ஆட்டோ, லாரி உள்ளிட்ட வாகனங்கள் இயங்கின. செவ்வாய்ப்பேட்டை, கடை வீதி, லீபஜார், புதிய, பழைய பஸ் ஸ்டாண்டுகள், ஐந்து ரோடு, ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், தனியார் நிறுவனங்கள் இயங்கியதால், மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை. அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், சேலம் மாநகரில் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தலைமையில், 800 போலீசாரும், மாவட்டத்தில், எஸ்.பி., தீபா கானிகேர் தலைமையில், 900 போலீசாரும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
* கொண்டலாம்பட்டி பைபாசில், மறியலில் ஈடுபட்ட, சி.பி.ஐ., மாவட்ட செயலாளர் மோகன் உள்பட, 111 பேரை போலீசார் கைது செய்தனர். சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட் தலைமை தபால் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்ட, 41 பேர் கைது செய்யப்பட்டனர்.
* ஆத்தூர், நரசிங்கபுரம் நகர் பகுதியில், கடைகள், வணிக நிறுவனங்கள் திறந்திருந்தன. தம்மம்பட்டி பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, கெங்கவல்லி, வீரகனூரில் கடைகள் அடைத்திருந்தனர்.
* வாழப்பாடியில், காங்., மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமையில், 60க்கும் மேற்பட்டோர், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விவசாயிகள் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் தங்கவேலு தலைமையில், வாழப்பாடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
* தலைவாசல், தினசரி காய்கறி மார்க்கெட் வழக்கம் போல செயல்பட்டது. தி.மு.க., - காங்., - வி.சி., உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள், சிலர் மட்டும் கடைகளை அடைத்திருந்தனர்.
* இடைப்பாடியில் உள்ள வெள்ளாண்டிவலசு, நைனாம்பட்டி, கடைவீதி பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. பூலாம்பட்டி, கொங்கணாபுரம் பகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட கடைகள் மூடியிருந்தன. விசைத்தறி கூடங்கள் இயங்கின.
* ஓமலூரில், வழக்கம் போல் கடைகள் திறந்திருந்தன. அரசு போக்குவரத்து பணிமனையில், தி.மு.க.,உள்ளிட்ட தொழிற்சங்கதினர், 40 பேர் பணிக்கு செல்லவில்லை.
* மேட்டூரில், பெரிய ஜவுளி கடைகள், 'டிவி' மொபைல் ?ஷாரூம், நகை கடைகள் என, 30 சதவீதம் அடைக்கப்பட்டிருந்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE