பாலக்கோடு: பாலக்கோட்டில் மண் சாலையை, தார்ச்சாலையாக மாற்றி தராததை கண்டித்து, அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பாலக்கோடு அருகே, ஜெர்த்தலாவ் பஞ்., பகுதியில், அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இதில், 1,000 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். ஓசூர் செல்லும் சாலையில் இருந்து, எல்லுகான்கொட்டாய், ராமன்கொட்டாய் வழியாக, மண் சாலையில் மாணவ, மாணவியர் கல்லூரிக்கு சென்று வந்தனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ராமன்கொட்டாய் பகுதியில், சாலையில், ஒரு கி.மீ., தூரத்துக்கு சேறும் சகதியுமாய் மாறியது. நேற்று முன்தினம் மூன்றாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கியதால், அவ்வழியாக கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் அவதிப்பட்டனர். இதையடுத்து, கல்லூரிக்கு செல்லும் மண் சாலையை, தார்ச்சாலையாக மாற்றி தராததை கண்டித்து, பாலக்கோடு - ஓசூர் நெடுஞ்சாலையில் திம்மம்பட்டி - காரிமங்கலம் கூட்டுரோட்டில், நேற்று காலை, 9:30 மணியளவில், மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த, இன்ஸ்பெக்டர் மனோகரன், தாசில்தார் ராஜா ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சாலை அமைத்து தருவதாக கூறியதை அடுத்து, மறியல் கைவிடப்பட்டது. மறியலால் மாரண்டஹள்ளி, ஓசூர் பஸ் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE