வாஷிங்டன்: பாகிஸ்தான், சீனா உட்பட, 10 நாடுகளை, மத சுதந்திரத்துக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடும் நாடுகளாக, அமெரிக்கா அறிவித்து உள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர், மைக் பாம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மத சுதந்திரம் என்பது, மறுக்க முடியாத சுதந்திரம். இன்று பல நாடுகள் சுதந்திரமாகவும், செழிப்பாகவும் இருப்பதற்கு, மத சுதந்திர அத்துமீறல்களை தவிர்த்ததே காரணமாக உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மர், ஆப்பிரிக்க நாடுகளான எட்ரியா, நைஜீரியா, மேற்காசிய நாடுகளான ஈரான், சவுதி அரேபியா, கிழக்காசிய நாடான வட கொரியா, மத்திய ஆசிய நாடுகளான, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய, 10 நாடுகள், மத சுதந்திரத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.

எனவே, இந்த நாடுகள், சி.பி.சி., எனப்படும், மத சுதந்திரத்திற்கு எதிரான செயல்பாடுகளில் கவலை அளிக்கும் நாடுகள் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. இதற்கு முன்னதாக, சிறப்பு கண்காணிப்பு பட்டியலில் வைக்கப்பட்டு இருந்த, வட ஆப்பிரிக்க நாடான, சூடான் மற்றும் மத்திய ஆசிய நாடான, உஸ்பெகிஸ்தான் ஆகியவை, அந்த பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றன. இந்த இரு நாடுகளும், மத சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை ஒடுக்க, பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளன; இது, மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது. இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE