கோவை: கோவை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக, கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவது போல், ஹெச்.ஐ.வி., தொற்றும் குறைந்து வருகிறது.
உலகில் பெரியம்மை, சின்னம்மை, போலியோ போன்ற பல கொடிய வைரஸ் நோய்கள் ஒழிக்கப்பட்டுள்ளன. ஆனால்எய்ட்ஸ் நோயை மட்டும், முழுமையாக ஒழிக்க முடியாத நிலை உள்ளது.தமிழகத்தை பொறுத்தவரை, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக, ஹெச்.ஐ.வி., தொற்று குறைந்துள்ளது. அரசின் துரித நடவடிக்கையால் மேலும் பரவாமல் தடுக்கப்பட்டு இருப்பதோடு, பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனால், 2001ம் ஆண்டுக்கு பிறகு, ஹெச்ஐவி கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இந்த நோயின் தொடக்க காலத்தில், இந்தியாவில் ஹெச்ஐவி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 20 லட்சமாக இருந்தது. இன்றைக்கு அது ஒரு லட்சமாக குறைந்துள்ளது. கோவையில் ஹெச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்கள், 4500 பேர் உள்ளனர்.
இதுகுறித்து, கோவை மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய திட்ட மேலாளர் கோபாலகிருஷணன் கூறியதாவது: கோவையில் உள்ள அனைத்து கல்லுாரிகளிலும், செஞ்சுருள் சங்கம் வாயிலாக மாணவர்கள் மத்தியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதனால் மக்கள் மத்தியில், நோய் குறித்து நல்ல புரிதல் இருக்கிறது. சந்தேகம் இருப்பவர்கள், உடனே மருத்துவ மையங்களை தொடர்பு கொள்கின்றனர். எல்லா மாவட்ட மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பரிசோதனை செய்யும் வசதி உள்ளது.டிபி மற்றும் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இந்த பரிசோதனை செய்யப்படுகிறது. அதனால் இன்றைக்கு ஹெச்ஐவி பாதிப்பு, தமிழகத்தில், 0.18 சதவீதமாக குறைந்துள்ளது.
கோவையில், 2006ல் ஹெச்.ஐ.வி.,யால் 3.05 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது, 0.38 சதவீதம் மட்டுமே உள்ளனர். 2030ம் ஆண்டுக்குள் பாதிப்பை, பூஜ்ஜிய அளவுக்கு கொண்டு வந்து விடலாம் என, உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் விழிப்புணர்வால், அந்த நாள் நிச்சயமாக வரும்.இவ்வாறு, அவர் கூறினார்.
'விழிப்புணர்வு அதிகம்'
ஹெச்ஐவி திட்ட ஆலோசகர் மீனாட்சி கூறுகையில், ''கோவையில், எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புப்புணர்வு மக்கள் மத்தியில் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களிடம் உள்ள குற்ற உணர்வை போக்கி, அவர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் பணிகளை செய்து வருகிறோம். நோயை நோயாக பார்க்கும் எண்ணம், மக்களுக்கு வரவேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தைரியம் வரும். அவர்களும் சக மனிதர்களை போல் வாழ நினைப்பார்கள். நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசு பல உதவிகளை செய்து வருகிறது. அதனால் பாதுகாப்பாக உள்ளனர்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE