கரூர்: அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், செட்டிப்பாளையம் அணையை தாண்டி செல்கிறது. அதை, சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
கேரளா மாநிலம் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து கடந்த, ஆறு முதல், ஆறு மற்றும் புதிய வாய்க்காலில் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு அணையில் இருந்து, 5,625 கன அடி தண்ணீர் ஆற்றிலும், 334 கன அடி தண்ணீர் புதிய வாய்க்காலிலும் திறக்கப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 89.51 அடியாக இருந்தது. வினாடிக்கு அணைக்கு, 5,972 கன அடி தண்ணீர் அமராவதி அணைக்கு வந்தது. அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், செட்டிப்பாளையம் அணை மற்றும் தடுப்பணை, பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைகளை தாண்டி, அமராவதி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி செல்கிறது. அதை, செட்டிப்பாளையம், பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைகளை சேர்ந்த மக்கள் பார்த்து ரசித்தனர்.
* மாயனூர் கதவணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 9,862 கன அடி தண்ணீர் வந்தது. டெல்டா பாசன பகுதிகளுக்கு, காவிரியாற்றில், 9,712 கன அடியும், மூன்று பாசன கிளை வாய்க்காலில் தலா, 50 கன அடி வீதம், 150 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
* க.பரமத்தி அருகே உள்ள, ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 32 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 25.91 அடியாக இருந்தது. இன்று அல்லது நாளை, ஆத்துப்பாளையம் அணை நிரம்பும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை பெய்த மழை விபரம் (மி.மீ.,) அரவக்குறிச்சி, 2.8, அணைப்பாளையம், 2, க.பரமத்தி, 1, குளித்தலை, 4, கிருஷ்ணராயபுரம், 1.6, மாயனூர், 1, கடவூர், 4 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 1.37 மி.மீ., மழை பதிவானது. நேற்று மதியம், திடீரென கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. வானம் மேக மூட்டமாக காணப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE