கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் தாலுகாவில் நில அளவீடு செய்ய லஞ்சம் பெற்ற சர்வேயரை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் தாலுகா முகையூர் குறுவட்டம், ஆற்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. விவசாயி. இவர் தனது நிலத்தை அளவீடு செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார். இதற்கான பணிகளை மேற்கொள்ள சர்வேயர் ராகவேந்திரன்,28: விவசாயி மூர்த்தியிடம் 7500 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இதனால் மூர்த்தி அதிர்ச்சியடைந்தார். மூர்த்தி புகாரின் பேரில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிந்து, நேற்று மாலை 6:00 மணியளவில் ரசாயனம் தடவிய பணத்தை சர்வேயர் ராகவேந்திரனிடம், மூர்த்தி கொடுத்தார்.அப்போது அங்கிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ராகவேந்திரனை கையும் களவுமாகப் பிடித்தனர்.
பின் லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி யுவராஜ், இன்ஸ்பெக்டர் ஏசுதாஸ் தலைமையிலான 8 க்கும் மேற்பட்ட போலீசார் கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் சோதனை செய்து அனுப்பி வைத்தனர்.சர்வேயர் ராகவேந்திரன் கைது செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணைக்கு பின் விழுப்புரத்தில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இச்சம்பவம் கண்டாச்சிபுரம் தாசில்தார் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE