சேலம்: பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால், நடப்பு கல்வியாண்டுக்கு மாணவ, மாணவியருக்கான விலையில்லா பஸ் பாஸ் விண்ணப்பங்களை பெற உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, கடந்த மார்ச் முதல், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இரு முறை பள்ளிகள் திறக்கப்படும் என, உத்தரவிடப்பட்ட பின்பு, திரும்ப பெறப்பட்டன. இந்நிலையில், கல்லூரிகள் திறக்கப்பட்டு, சமூக இடைவெளியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வரும் சூழலில், ஜனவரி முதல், பள்ளிகள் திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, கல்வியாண்டின் துவக்கத்திலேயே, விலையில்லா பஸ் பாஸ் விண்ணப்பங்கள் பெறப்படுவது வழக்கம். நடப்பு கல்வியாண்டில், பள்ளிகள் திறக்காததால், இதுவரை பெறப்படாமல் இருந்தது. தற்போது, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், மாணவர்களிடமிருந்து, விலையில்லா பஸ் பாஸ் விண்ணப்பங்களை பெற்று, அந்தந்த மண்டல போக்குவரத்து கழக அலுவலகங்களில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, சேலம் மாவட்ட அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில், மாணவ, மாணவியர் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு, விலையில்லா பஸ் பாஸ் விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE