சென்னை: 2ஜி வழக்கில் கையாலாகாத காங்கிரஸ் விலகி கொண்டதாகவும், அதன் பின்னர் தானே அந்த வழக்கை முழுமையாக விசாரணையை எதிர்கொண்தாக தி.மு.க., துணைப்பொதுச்செயலர் ஆ.ராசா கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: 2ஜி வழக்கில் நான் குற்றவாளி இல்லை என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையில் உள்ள எந்த குற்றத்தையும் சி.பி.ஐ., நிரூபிக்கவில்லை. இந்த வழக்கில் எந்தவித தயக்கமும் இல்லாமல் அனைவரையும் நீதிபதி விடுதலை செய்துள்ளார். 2ஜி வழக்கில் ஒரு நாள் கூட நான் வாய்தா வாங்கவில்லை. இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டது என நீதிபதி தெரிவித்துள்ளார்.
ஆனால், 2ஜி வழக்கில், முதல்வர் பழனிசாமி தனது தகுதியை மறந்து மிக மோசமாக விமர்சித்துள்ளார். வதந்தி, ஊகம், கிசுகிசு என்பது தான் 2ஜி வழக்கு என நீதிபதிகள் கூறியுள்ளனர். ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உண்மைகளை மறைத்து முதல்வரும், அதிமுகவினரும் பேசி வருகின்றனர்.
2ஜி வழக்கில் கையாலாகாததனத்தால், காங்கிரஸ் விலகி கொண்டது. அதன் பின்னர், வழக்கை நானே எதிர்கொண்டேன். வழக்கில் பெரும்பாலான விசாரணை பா.ஜ., ஆட்சியில் தான் நடந்தது. விசாரணையை நடத்தியது உச்சநீதிமன்றமும், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞரும் தான். முக்கியமான சாட்சியங்கள் எல்லாம் பா.ஜ., ஆட்சியில் தான் விசாரிக்கப்பட்டனர். 2ஜி வழக்கில் நான் விடுவிக்கப்பட்டது பா.ஜ.,விற்கு பெரிய அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த வழக்கு அக்கட்சிக்கு மிகப்பெரிய அறுவடை என்பதால், அவர்கள் மேல்முறையீடு செய்வார்கள். அதனை எதிர்கொள்ள நான் தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE