சென்னை : சின்னத்திரை புகழ் சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் அவரது முகத்தில் இருக்கும் காயங்களை சுட்டிக்காட்டி இது கொலையாக கூட இருக்கலாம் என டுவிட்டரில் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால் சித்ரா விவகாரம் டிரெண்டிங் ஆனது.
சென்னையை சேர்ந்த சித்ரா, வீ.ஜே.வாக தனது பயணத்தை துவக்கினார். பல டிவிக்களில் தொகுப்பாளினியாக வலம் வந்தவர், பின்னர் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' என்ற தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.
இந்நிலையில் நேற்று(டிச.,08) இரவு படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு திரும்பிய சித்ரா, அதிகாலை நேரத்தில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓட்டல் அறையில் சித்ராவுடன் அவர் பதிவு திருமணம் செய்ததாக கூறப்படும் ஹேமந்த் ரவியும் உடன் இருந்துள்ளார்.

ஹேமந்த்திடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ‛‛சித்ரா குளிக்க செல்வதாக கூறி தன்னை வெளியே போக சொன்னவர், நீண்டநேரமாகியும் கதவு திறக்கவில்லை. இதனால், சந்தேகம் அடைந்து ஓட்டல் ஊழியர்களிடம் மாற்று சாவி வாங்கி அறையை திறந்தபோது, சித்ரா மின்விசிறியில் தூக்கிட்டு சடலமாக தொங்கினார்'' என தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் தங்களுக்கு கடந்த அக்., 19ம் தேதியே பதிவு திருமணம் செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். திருமணமாகி இரண்டே மாதத்தில் தற்கொலை செய்திருப்பதால் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே சித்ரா மரணம் தொடர்பாக நெட்டிசன்கள் பலரும் டுவிட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர். சித்ரா அதிகாலையில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதற்கு ஓரிரு மணி நேரங்களுக்கு முன்பாகத்தான் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். மற்றொரு டிவி நடிகையான சரண்யா, தன்னை ஜாலியாகக் கிண்டல் செய்த ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
‛‛அவ்வளவு மகிழ்வான மனநிலையில் இருந்தவர் ஒரு சில மணி நேரத்திற்குள்ளாகவே தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்திற்கு எப்படி மாற முடியும்'' என ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

அவருடைய உடலில் காயங்கள் உள்ளன. குறிப்பாக கன்னத்தில், நாடியில் காயத்துடன் இருக்கும் போட்டோக்கள் சமூகவலைதளங்களில் உலவுகின்றன. ‛‛இந்த காயங்களை பார்க்கும்போது இது தற்கொலை போன்று தெரியவில்லை, கொலையாக இருக்கலாம்'' என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
‛‛மிகவும் தைரியமான பெண்ணான அவர் இப்படி ஒரு முடிவை எடுக்க என்ன காரணம்? பதிவு திருமணம் செய்ததாக சொல்லப்படுவது உண்மை என்றால், அவரின் கணவரான ஹேமந்த்தை போலீசார் தீவிரமாக விசாரிக்க வேண்டும்'' என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
அவருடன் நடித்த சக நடிகைகள் பலரும், ‛‛சித்ரா தைரியமான பெண், நிச்சயம் அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை'' என சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இன்னும் சிலர், ‛‛எவ்வளவு பெரிய பிரச்னை என்றாலும் அதை சமாளிக்க வேண்டும். தற்கொலை ஒரு போதும் தீர்வு ஆகாது. காலையில் எழுந்து இப்படி ஒரு செய்தியை பார்த்ததும் மிகவும் அதிர்ச்சியானோம். உங்களின் ஆன்மா சாந்தி அடையட்டும் சித்ரா'' என பொதுவாக கருத்து பதிவிட்டுள்ளனர்.
சித்ராவின் மரணம் சமூகவலைதளங்களில் #RIPChitra, #chithuvj, #Mullai, #PandianStores உள்ளிட்ட ஹேஷ்டாக்குகளில் தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.
இப்படி பல கேள்விகளை பலரும் முன் வைத்து வருகின்றனர். ஆனால் நடந்தது என்ன என்பது, போலீஸ் விசாரணை முடிந்த பின் தான் இது பற்றிய முழுமையான தகவல்கள் வெளிவரும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE