புதுடில்லி: வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு, எழுத்துப்பூர்வமாக அளித்த பரிந்துரைகளை நிராகரித்த விவசாய சங்கங்கள், போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளன. இதனிடையே, மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி எதிர்க்கட்சி தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசினர்.
மத்திய அரசு அமல்படுத்திய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி - ஹரியானா சாலையில் பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு 5 கட்ட பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், முடிவு எதுவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. நேற்று இரவு(டிச.,08), விவசாய சங்க பிரதிநிதிகள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினர். அப்போது, விவசாயிகள் தெரிவித்த பிரச்னைகள் தொடர்பாக சட்டத்தில் திருத்தவும், அதனை எழுத்துப்பூர்வமாக அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வேளாண் சட்டத்தில் செய்ய உள்ள திருத்தங்கள் குறித்து, எழுத்துப்பூர்வமான அறிக்கையை விவசாய சங்கங்களிடம் இன்று அளிக்கப்பட்டது.

இதனை பரிசீலனை செய்த விவசாய சங்கங்கள் அதனை நிராகரித்து விட்டன. பழைய மசோதாவை திருத்தம் செய்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர்கள், போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர். பழைய சட்டத்தை, புதிதாக மாற்றி கொடுத்ததாக தெரிவித்துள்ள சங்க நிர்வாகிகள், வரும் 12ம் தேதி டில்லி - ஜெய்ப்பூர், டில்லி ஆக்ரா நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டம் நடத்தப்படும்.14ம் தேதி பா.ஜ., அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடக்கும் என தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ள அவர்கள், நாட்டின் மற்ற பகுதிகளில் இருக்கும் விவசாயிகள், டில்லியில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கும்படி கூறியுள்ளனர்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE