சாதிக்க வயது தடையில்லை!
முருங்கையில் இருந்தும் பெரிய அளவில், லாபம் தரும் தொழில் செய்யலாம் என்பதை உணர்த்தி வருவது பற்றி,கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி கண்ணையன்: பத்து வருஷத்துக்கு முன், நண்பர் ஒருவர் மூலமா, மதுரை வேளாண் கல்லுாரியில் நடந்த, முருங்கையை மதிப்பு கூட்டி விற்பனை செய்தல் சம்பந்தமான, இரண்டு நாள் பயிற்சியில் கலந்துக்கிட்டேன். அதில் ஆர்வமாகி, முருங்கை இலை, பூ, காய்களில், 'சூப்' பொடிகளை தயாரிச்சு, எனக்கு தெரிஞ்சவங்க, நண்பர்கள்கிட்ட கொடுத்தேன்; அதை அவங்க மதிக்கவே இல்லை. அதற்காக நான் சோர்ந்து போகவில்லை. அப்படியே, ஆண்டிப்பட்டி கோட்டை அருகில், 5 ஏக்கர் முருங்கை தோட்டத்தை குத்தகைக்கு புடிச்சு, சிறிய கடை மாதிரி வச்சு, அதில் சூப் தயார் செஞ்சு, விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். தேசிய நெடுஞ்சாலை என்பதால், பலரும் இந்த வழியா வர்றவங்க, எங்க கடையில் வந்து சூப் குடிச்சாங்க. இப்படியே கூட்டம் அதிகரித்தது. பலரும் சூப் குடிக்கிறதோட, சூப் பொடி பாக்கெட்டுகளையும் வாங்கிட்டு போக ஆரம்பிச்சாங்க. இதனால, தொழிலை விரிவுபடுத்த, பொருளாதார ரீதியா சப்போர்ட் பண்ண, என் உறவினர் சுப்ரமணியன் பங்குதாரரா சேர்ந்துகிட்டேன். நான், சூப் பொடிகள் தயாரிக்கும் வேலையை கவனிச்சுக்கிறேன்; அவர் மார்க்கெட்டிங் வேலையை பார்க்கிறார். முதலில் முருங்கை இலை, ஆவாரம்பூ, கொள்ளு, மிளகு, தக்காளி, கீரை, துாதுவளை, வல்லாரைன்னு கீரை இலைகளில் சூப் மட்டும் தயாரிச்சோம். பின், வாடிக்கையாளர்களின் தேவை உணர்ந்து, விதவிதமான சாதப் பொடிகளை செய்ய ஆரம்பித்தோம். சுப்ரமணியன்: எங்க கம்பெனிக்கு, 'யுவாஸ் நேச்சுரல் புட்ஸ்' என்று பெயர் வச்சோம். ஆரம்பத்துல, தமிழகத்துல மட்டும் வாடிக்கையாளர்களும், டீலர்களும் கிடைச்சாங்க. பொருட்களோட தரம், எங்க விற்பனையை விரிவுபடுத்துச்சு. அமெரிக்காவிலுள்ள, 'நேச்சுரல் மில்ஸ்'ங்கிற கம்பெனி, மாதம் இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை, எங்ககிட்ட வாங்க ஆரம்பிச்சாங்க. இப்படி, படிப்படியாக எங்க கம்பெனி வளர்ந்துச்சு.தொடர்ந்து, ரெடி மிக்ஸ் தோசை பவுடர்களை தயாரிக்க ஆரம்பித்தோம். அதேபோல், துாதுவளை ரசம், முருங்கைக்காய் பால் பவுடர் என்று பலவற்றை தயாரிச்சு, விற்க ஆரம்பித்தோம்.
மாதம் 3 டன் அளவுக்கு பொருட்களை விற்பனை செய்கிறோம். இப்போதைக்கு எல்லா செலவுகளும் போக, 3 லட்ச ரூபாய் வருமானம் வருது. கடின உழைப்பு, புது உத்திகள் மூலம் வளர்ந்து வருகிறோம். எங்க ரெண்டு பேருக்குமே, 55 வயசுக்கு மேல ஆயிடுச்சு. ஆனா, சாதிக்க வயசு ஒரு தடை இல்லையே!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE