திருவாரூர்:''விவசாயி என்பதுதான் நிரந்தரம்,அடுத்தது தான் முதலமைச்சர்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., பெருமிதத்துடன் கூறினார்.
திருவாரூர் மாவட்டத்தில், புயல், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, நேற்று முதல்வர் இ.பி.எஸ், பார்வையிட்டார். திருத்துறைப்பூண்டி அருகே, கொக்காலடி கிராமத்தில், மழையால் பாதிக்கப்பட்ட வயலில் இருந்து, விவசாயிகள் காண்பித்த அழுகிய நெற்பயிரை, கையில் வாங்கி பார்த்தார். அவர்களிடம், குறைகளை கேட்டறிந்தார்.
பின், திருத்துறைப்பூண்டி முகாமில் தங்கியிருந்த மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி, அவர்களுக்கு, மதிய உணவு பரிமாறினார். தொடர்ந்து, தென்னவராயநல்லுாரில், விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்து, குறைகளை கேட்டு, கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
அங்கு அவர் அளித்த பேட்டி:
இந்த பகுதி சமவெளி பகுதியாகும். அதிக மழை பெய்யும் போது, வயல்களில் தண்ணீர் தேங்குகிறது. அத்துடன், புயல் உருவாகும் போது, கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால், கடல் நீர்மட்டம் உயர்ந்து, கடல்நீர் உட்புகுகிறது. ஆதலால், மழைநீர் வடிவதற்கு, காலதாமதம் ஆகிறது. மீனவர்கள் நலனுக்காக, கன்னியாகுமரி முதல், கடலோர மாவட்டங்களில், அதிகபட்சமாக, அ,தி.மு.க., ஆட்சியில் தான், துாண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
மூன்று வேளாண் சட்டங்களால், தமிழக விவசாயிகளுக்கு, எந்த விதத்தில் பாதிப்பு ஏற்படுகிறது? இந்த சட்டங்களால், விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை, இடைத்தரகர்கள் இன்றி, உள் மற்றும் வெளிநாட்டில் சந்தைப்படுத்திக் கொள்ளலாம். இந்த சட்டங்கள், தமிழக விவசாயிகளுக்கு வரப்பிரசாதம். விவசாயிகள் விருப்பப்பட்டால் மட்டுமே, இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். இதில், நல்ல அம்சங்கள் இருப்பதால், நாங்கள் ஆதரிக்கிறோம்.
எனக்கு விவசாயி என்பதுதான் நிரந்தரம். அதற்கு அடுத்தது தான், முதலமைச்சர். விவசாயப் பணி கடினமானது. நான் விவசாயி என்பதால், விவசாயிகளை சந்தித்து வருகிறேன். இந்த சட்டத்தையும் ஆதரிக்கிறேன்.எட்டுவழிச் சாலை, மத்திய அரசின் திட்டம். இதில், தமிழக அரசு, நிலம் கையகப்படுத்தி மட்டுமே தருகிறது. இந்த திட்டத்தால், வாகன போக்குவரத்து நெரிசலை தவிக்க முடியும். எரிபொருளை சேமிக்க முடியும். வளர்ந்து வரும் மாநிலமான, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தர்காவில் முதல்வர்
முன்னதாக, நாகை மாவட்டத்தில் சேதமடைந்த பகுதிகளை, முதல்வர், இ.பி.எஸ்., பார்வையிட வந்தார். நேற்று காலை, வேளாங்கண்ணி தேவாலயம் சென்றார். தேவாலய அதிபர் பிரபாகர் மற்றும் பாதிரியார்கள் வரவேற்றனர். சிறப்பு பிரார்த்தனைக்கு பின், மாதா சொரூபம், முதல்வருக்கு நினைவு பரிசாக வழங்கப்பட்டது. பின், நாகூர் வந்த முதல்வருக்கு, தர்கா நிர்வாகம் சார்பில், நகரா என்ற மங்கள வாத்தியம் முழங்க, வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வருக்கு குல்லா அணிவிக்கப்பட்டு, தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாகிப் தலைமையில் துவா ஓதப்பட்டது. அங்கு, சேதமடைந்த தர்கா குளத்தின் சுவர்களை, முதல்வர் பார்வையிட்டார்.பின், கைத்தறித் துறை அமைச்சர் மணியன் இல்லத்திற்கு சென்றார். அங்கு, அமைச்சரின் மனைவி உருவப் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE