புதுடில்லி :வேளாண் சட்டங்கள் தொடர்பாக, மத்திய அரசு எழுத்து பூர்வமாக அளித்த பரிந்துரைகளை, விவசாய சங்கங்கள் நிராகரித்து விட்டன. 'மூன்று சட்டங்களையும், மத்திய அரசு திரும்பப் பெறும் வரை, போராட்டம் தொடரும்' என, தெரிவித்துள்ளன.
மத்திய அரசு, கடந்த செப்டம்பரில், மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்தியது. இந்த சட்டங்களை வாபஸ் பெறக் கோரி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டில்லியில், கடந்த, 14 நாட்களாக முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தீர்வு ஏற்படவில்லை
இதனால், டில்லி எல்லைப் பகுதியில், போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. மத்திய அரசு, விவசாய சங்க பிரதிநிதிகளுடன், ஐந்து சுற்று பேச்சு நடத்தியும், தீர்வு ஏற்படவில்லை.
இந்நிலையில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, விவசாய சங்கங்கள் சார்பில், நேற்று முன்தினம், நாடு தழுவிய அளவில், 'பந்த்' நடந்தப்பட்டது. இந்தப் போராட்டத்துக்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலவும் ஆதரவு தெரிவித்தன. இதற்கிடையே, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, நேற்று முன்தினம் இரவு சந்தித்தனர்.
பேச்சு ஒத்திவைப்பு
'போராட்டத்தால் சாதாரண மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும், போக்குவரத்து பாதிப்பை நீக்கவும் ஒத்துழைக்க வேண்டும்' என, அவர்களிடம் அமித் ஷா வலியுறுத்தினார். மேலும், வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் செய்ய தயாராக இருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன், மத்திய அரசு நேற்று நடத்த இருந்த, ஆறாம் சுற்று பேச்சு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், வேளாண் சட்டங்களில் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தங்கள் பற்றி, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளிடம், மத்திய அரசு, நேற்று அறிக்கை ஒன்றை அளித்தது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:
விவசாயிகள் பிரச்னைகளுக்கு திறந்த மனதுடன் தீர்வு காண, மத்திய அரசு விரும்புகிறது. விவசாய சமூகத்திற்கு மரியாதை செலுத்த, அரசு கடமைப்பட்டுள்ளது.புதிய வேளாண் சட்டங்கள் குறித்து, விவசாயிகளின் கவலைகளை போக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.
அமலில் இருக்கும்
பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை ரத்து செய்யப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது தொடர்ந்து அமலில் இருக்கும். இது பற்றி, எழுத்து பூர்வமாக உறுதியளிக்கவும், அரசு தயாராக உள்ளது. சச்சரவுகள் ஏற்பட்டால், விவசாயிகள் நீதிமன்றத்திற்கு செல்ல முடியும். விவசாயிகள் எதிர்க்கும் மின்சார சட்ட திருத்த மசோதா, ரத்து செய்யப்படும். இந்த சட்டங்களால், மாநில அரசுகள் நடத்தும்,ஏ.பி.எம்.சி., எனப்படும்,விவசாய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.மாறாக, இந்த கூடங்களை தவிர, வெளியிலும் பொருட்களை விற்க, விவசாயிகளுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
பல முறை விளக்கம்
இந்த சட்டங்களால் பண்ணை நிலங்களை, பெரிய நிறுவனங்கள் வாங்கிவிடும் என்ற பயம் தேவையில்லை. இது பற்றி பலமுறை விளக்கம் அளிக்கப்பட்டு விட்டது. இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது. ஆனால், இதைப் படித்து பார்த்த விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், அரசின் பரிந்துரைகளை நிராகரித்தனர். இது பற்றி அவர்கள் கூறியதாவது: பழைய சட்டங்களையே, புதிதாக மாற்றி கொடுப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதனால், வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் வரை, எங்கள் போராட்டம் தொடரும். நாளை மறுநாள், டில்லி -- ஜெய்ப்பூர், டில்லி - ஆக்ரா நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டம் நடத்துவோம். வரும், 14ம் தேதி, விவசாயிகள் நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
'வெற்றிக்குப் பின் தான் வீடு திரும்புவோம்!'
டில்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில், முதியவர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். இவர்களில் பலரும், போராட்டம் வெற்றி பெற்ற பின் தான், வீடு திரும்பும் உறுதியில் உள்ளனர்.போராட்டத்தில் பங்கேற்றுள்ள, 75 வயதுக்கு மேற்பட்ட பஞ்சாப் விவசாயிகள் கூறியதாவது:மத்திய அரசு, மூன்று சட்டங்களை, வாபஸ் பெறும் வரை, போராட்டத்தில் ஈடுபடுவோம். போராட்டத்தில் வெற்றி பெறாமல், வீடு திரும்ப மாட்டோம் என, எங்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்து விட்டு தான், டில்லிக்கு புறப்பட்டோம். ஏனெனில், இது எங்களின் உரிமை போராட்டம்; எங்களின் வருங்கால சந்ததியினர் நலனுக்காக போராடுகிறோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சிகள் மனு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி, எதிர்க்கட்சி தலைவர்கள், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, நேற்று சந்தித்து பேசினர்.
காங்கிரஸ் எம்.பி., ராகுல், தி.மு.க.,- எம்.பி., இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர், ஜனாதிபதியை சந்தித்தனர். அவரிடம், மத்திய அரசு, வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, மனு கொடுத்தனர்.
பின், அவர்கள் கூறியதாவது:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் தொடர்பாக, எங்கள் கவலைகள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்களை, ஜனாதிபதியிடம் தெரிவித்தோம். இந்த சட்டங்களை திரும்பப் பெறக்கோரி, அவரிடம் மனு அளித்தோம்.வேளாண் சட்டங்கள் குறித்து, ஆழமாக விவாதம் நடத்த வேண்டும். அதனை, பார்லி., நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை, மத்திய அரசு ஏற்கவில்லை. அவசர கதியில், சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. கடும் குளிரில், விவசாயிகள் அமைதியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் பிரச்னையை தீர்க்க வேண்டியது, அரசின் கடமை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE