சிதம்பரம் : நீர் மேலாண்மை திட்டத்தில் மேட்டில் இருந்து பள்ளத்தை நோக்கி கால்வாய் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால் சிதம்பரம் நடராஜர் கோயிலில் 1000 ஆண்டுகளுக்கு முன்பே பள்ளத்தில் இருந்து மேட்டை நோக்கி சுரங்க கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்து உபரிநீர் வெளியேற கோவிலில் உள்ள யானைக்கால் மண்டபத்தின் மேற்கு பகுதியில் இருந்து வடக்கே அமைந்துள்ள தில்லைக்காளி கோவில் சிவப்பிரியை குளத்தை சென்றடையும் வண்ணம் பூமிக்கு அடியில் சுரங்க நிலவறை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
வீராணம் ஏரி
இக்கால்வாயை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வரலாற்றுத் துறை தொல்லியல் ஆய்வாளர்கள் சிவராமகிருஷ்ணன் பேராசிரியர் கலைச்செல்வன் மற்றும் ஆய்வு மாணவர்கள் சுசேந்திரன் ராஜராஜன் பிரபாகரன் அடங்கிய குழு ஆய்வு செய்தது.
ஆய்வு குறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது: நடராஜர் கோவிலில் பள்ளமான பகுதியான தெற்கில் இருந்து மேடான பகுதியான வடக்கு நோக்கி நீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதாவது பள்ளமான பகுதியில் இருந்து மேடான பகுதி நோக்கி நீர் கொண்டு செல்லும் கால்வாய் உலகத்திலேயே வேறு எங்கும் அமைக்கப்படவில்லை.கால்வாய் ஒரு இடத்தில் அகலமாகவும் பின் குறுகலாகவும் என மாறி மாறி வளைவுகளுடன் பாம்பு போல் அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளமான பகுதியில் இருந்து மேடான பகுதிக்கு நீர் அழுத்தத்துடன் வெளியேற இந்த அமைப்பை பயன்படுத்தி உள்ளனர்.பராந்தக சோழன் கீழணையில் இருந்து மேடான பகுதியான வீராணம் ஏரிக்கு தெற்கில் இருந்து வடக்கு நோக்கி வடவாறு வழியாக வாய்க்கால் அமைத்துள்ளான். 'பாம்பு போல் வாய்க்கால் இருந்தால் தண்ணீர் பனையும் ஏறும்' என்ற பழமொழி இதற்கு பொருந்தும்.நீரை எளிதாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்தவும் சேமிக்கவும் சிறந்த நீர் மேலாண்மை நிர்வாகிகளாக சோழர்கள் இருந்துள்ளனர் என்பதை இது காட்டுகிறது.
சிதம்பரம் கோவில் நிலவறை கால்வாய் 1250 மீட்டர் நீளம் கொண்டது. நிலமட்டத்தில் இருந்து 119 செ.மீ. ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது.இக்கால்வாயின் உள் அளவு உயரம் 77 செ.மீ அகலம் 63 செ.மீ. ஆகும். கட்டமைப்புக்கு நன்கு அரைக்கப்பட்ட களிமண்ணில் உருவாக்கப்பட்ட சுட்ட செங்கற்களை பயன்படுத்தி உள்ளனர்.செங்கற்களை இணைக்கசுண்ணாம்பு சாந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. 2 அடி அகலம் 5 அடி நீளமுள்ள பெரிய கருங்கல் பலகைகளை கொண்டு கால்வாயின் மேல்பகுதி மூடப்பட்டுள்ளது.
சோழர் காலம்
இந்த கால்வாயின் கட்டுமான அமைப்பும் அதன் தொழில்நுட்பத்தையும் பார்க்கும் போது பிற்கால சோழர்கள் காலத்தில் அதாவது கி.பி. 10-13ம் ஆண்டில் இக்கால்வாய் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.இதுபோன்ற கால்வாய் அமைக்கும் திட்டம் 5000 ஆண்டுகளுக்கு முன் ஹரப்பா மொகஞ்சதாரோ உள்ளிட்ட பகுதிகளில் சிந்து சமவெளி நாகரீக மக்கள் பயன்படுத்தி உள்ளனர்.அதே தொழில்நுட்பத்தை தமிழர்களும் பயன்படுத்தியுள்ளதால் சிந்து சமவெளி நாகரீகத்திற்கு நிகரான தொழில்நுட்ப அறிவுடன் தமிழர்கள் விளங்கியதை எண்ணி பெருமை கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE