சென்னை:'கோடம்பாக்கம் சாலை பள்ளத்தில் விழுந்து, முதியவரும்; மதுரவாயலில் மழை நீர் வடிகால் கால்வாயில் விழுந்து, தாயும், மகளும் மரணம் அடைந்ததற்கு, மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியம் தான் முக்கிய காரணம்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:சென்னை, கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே, செப்பனிடப்படாமல் இருந்த சாலை பள்ளத்தில் விழுந்த முதியவர் ஒருவர், தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளார்.அப்பகுதியில், ஒரு மாதத்திற்கு மேலாக பள்ளம் இருந்துள்ளது; அப்பகுதி மக்கள், 10 முறைக்கும் கூடுதலாக புகார் தெரிவித்தும், மாநகராட்சிஎந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சென்னை மதுரவாயலை அடுத்த நொளம்பூரில், சாலை ஓரத்தில் மூடப்படாத கால்வாயில், மோட்டார் சைக்கிளில் சென்ற தாயும், மகளும் விழுந்து உயிரிழந்துள்ளனர். பள்ளங்களை எளிதாக சீரமைக்கும் கருவிகள் வந்து விட்டன. எனவே, சாலை பள்ளங்களில் விழுந்து, மக்கள் உயிரிழக்கின்றனர் என்பது, ஏற்க முடியாதது. இதற்கு, அதிகாரிகளின் அலட்சியம் தான் முக்கிய காரணம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
ராமதாசின் மற்றொரு அறிக்கை:பள்ளிக் கல்வியில் இருந்து, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே, அரசு பணிகளில், 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத் திருத்தம், எட்டு மாதங்களாக கிடப்பில் கிடந்தது. பா.ம.க., கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பத்தாம் வகுப்பு வரை, தமிழ் கட்டாய பாடச் சட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும். எட்டாம் வகுப்பு வரையாவது, தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்க, புதிய சட்டம் இயற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE