பொன்னேரி:கல்லுாரிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில், புறநகர் ரயில்களில் செல்ல அனுமதி மறுக்கப்படுவதால், மாணவர்கள் தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.
கொரோனா ஊரடங்கு தளர்வைத் தொடர்ந்து, எட்டு மாதங்களுக்குப் பின், இறுதி ஆண்டு மாணவர்களுக்கு, கல்லுாரிகள் திறக்கப்பட்டு உள்ளன.கடந்த, 7ம் தேதி முதல், மாணவர்கள் கல்லுாரிக்கு செல்ல வேண்டிய நிலையில், புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதி மறுப்பதால், சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
கல்லுாரிக்கு செல்ல ஆவலுடன் ரயில் நிலையம் வந்த மாணவர்களுக்கு, பயணம் செய்ய பயணச்சீட்டு தரப்படவில்லை. மூன்று நாட்களாக மாணவர்கள் ரயில் நிலையம் வந்து, கல்லுாரி செல்ல முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட புறநகர் பகுதி யில் உள்ள மாணவர்கள் சென்னையில் உள்ள கல்லுாரிகளில் படிக்கின்றனர். பஸ் வசதியும் குறைவாக உள்ளதால், புறநகர் செல்ல முடியாமல் மாணவர்கள் பெரும் தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.அதேபோன்று, நீண்ட நாள் சிகிக்சை பெறும் நோயாளிகள், சென்னை அரசு மருத்துவ மனைகளுக்கு வாரம் ஒரு முறை சென்று, மருந்து, மாத்திரைகள் வாங்கி வருகின்றனர். அவர்களுக்கும் அனுமதி மறுக்கப்படுவதால், சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
புறநகர் ரயில்களில், கல்லுாரி மாணவர்கள், நோயாளிகள் சென்று வருவதற்கு பயணச்சீட்டு வழங்கி அனுமதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:புறநகர் ரயில்களில் யார், யாரை அனுமதிக்கலாம் என, எங்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில், மாணவர்கள் என்ற பிரிவு இல்லை; அதனால், அவர்களை ரயில்களில் பயணிக்க அனுமதிக்கவில்லை.
கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களை அனுமதிப்பது குறித்து, அரசுதான் பரிந்துரைக்க வேண்டும். அரசு வழிகாட்டி முறைகளை மாற்றி தந்தால், வாரிய ஒப்புதல் பெற்று, மாணவர்கள் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
சரியான அறிவுறுத்தல் இல்லை
பஸ், ஆட்டோ மூலம் கல்லுாரிக்கு செல்ல வேண்டுமானால், தினமும், 300 - 400 ரூபாய் வரை செலவிட வேண்டும். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், எங்களை போன்ற கல்லுாரி மாணவர்கள் புறநகர் ரயிலில் பயணிக்க முடியாமல் தவிக்கின்றனர். மாணவர்களை கல்லுாரிக்கு வரவழைக்கும் அரசு, ரயில் நிலையங்களுக்கு சரியான அறிவுறுத்தல்கள் வழங்க வில்லை.
தேர்வு நெருங்கும் நிலையில், மாணவர்கள் நலன் கருதி, அனைத்து புறநகர் ரயில்களிலும், பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
எஸ். ஸ்ரீவர்ஷினி, பி.எஸ்சி., சைக்காலஜி,3ம் ஆண்டு மாணவி,
சென்னை தனியார் கல்லுாரி
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE