சென்னை:தமிழகம் உட்பட, செட்டிநாடு குழுமத்தைச் சேர்ந்த, 60 இடங்களில், வருமான வரித் துறை அதிகாரிகள், நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னையை தலைமை இடமாக வைத்து, செட்டிநாடு குழுமம் செயல்பட்டு வருகிறது. பிரபல தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி இந்த குழுமத்தை துவக்கினார்.இந்த குழுமத்தின் கீழ், சிமென்ட் தயாரிப்பு, மருத்துவமனை, கல்வி, நிலக்கரி சுரங்கம், சரக்கு போக்குவரத்து, கட்டுமானம் என, பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்த குழுமம், வருவாய்க்கு ஏற்ப முறையாக வரி செலுத்தாமல், வரி ஏய்ப்பு செய்வதாக, வருமான வரித் துறைக்கு தகவல் கிடைத்தது.
முரண்பாடு
இதையடுத்து, சென்னை அண்ணாசாலையில் உள்ள செட்டிநாடு குழுமத்தின் கார்ப்பரேட் அலுவலகம், ஆர்.ஏ.புரத்தில் உள்ள செட்டிநாடு மாளிகை; செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளிகளில், வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இதேபோல்;, கரூர் மாவட்டம் புலியூர்; திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் தாலுகா காரக்கள்ளி; அரியலுார் மாவட்டம், கீழப்பழுவூர்; கர்நாடகா மாநிலம், குல்பர்கா மாவட்டம், செஞ்சோலி ஆகிய இடங்களில் உள்ள, சிமென்ட் தொழிற்சாலைகளிலும் சோதனை நடந்தது.
திருப்போரூரில் உள்ள செட்டிநாடு மருத்துவமனை உட்பட, கோவை, மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் என, குழுமத்திற்கு சொந்தமான, 50 இடங்களில், வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை, 8:00 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். வரித்துறையினர், குழுக்களாக பிரிந்து, 400க்கும் மேற்பட்ட அதிகாரிகள், இந்த சோதனையை நடத்தினர்.
இது குறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது:செட்டிநாடு குழுமத்தின் வரவு - செலவு கணக்குகளில் முரண்பாடு ஏற்பட்டதாலும், வரி ஏய்ப்பு செய்வதாக வந்த புகாரின் அடிப்படையிலும், அந்த குழுமத்திற்கு சொந்தமான, 60 இடங்களில் நேற்று சோதனை நடந்தது.இதில், சென்னை அண்ணா சாலையில் உள்ள, செட்டிநாடு டவர்ஸ் கட்டடத்தில், வருமானவரி துணை இயக்குனர் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது.
இதுதவிர, சென்னையில் மட்டும், 52 இடங்களில் சோதனை நடந்தது. இந்த குழுமத்தில், 2015ம் ஆண்டிலும், மிகப் பெரிய அளவில் சோதனை நடந்தது. அதில், வருவாய்க்கு அதிகமாகவும், கணக்கில் காட்டாமல் ஏராளமான சொத்துக்கள் சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது, வரி ஏய்ப்பு புகார் எழுந்ததை அடுத்து, இந்த சோதனை நடத்தப்படுகிறது. கணக்கில் காட்டாமல் ஏராளமான சொத்துக்கள் வாங்கியிருப்பதும், வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. முறையான சோதனை முடிந்த பின், அதன் மதிப்புகள் தெரியவரும்; சோதனை தொடரும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
ரூ. 7 கோடி பறிமுதல்
செட்டிநாடு குழுமத்தில் நடந்த வருமானவரி சோதனையில், கணக்கில் காட்டப்படாத, 7 கோடி ரூபாய் ரொக்கத்தை, முக்கிய நபர் ஒருவர் வீட்டில் இருந்து, வருமானவரி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE