இரண்டாம் உலகபோரில் உலகம் முழுவதும் படுகொலைகள், சொத்து இழப்பு, பேரழிவுகள் ஏற்பட்டன. மறுபடியும் இவ்வாறு நடக்காமல் தடுக்க உலக நாடுகள் இணைந்து 1948 ல் சர்வதேச மனித உரிமை பிரகடனத்தை உருவாக்கின.ஐக்கிய நாடுகள் பொது சபை ஏற்று கொண்ட டிச., 10 உலகம் முழுவதும் மனித உரிமைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. 2020 ஆண்டின் மனித உரிமை தின கருப்பொருளாக 'சிறப்பாக மீண்டெழுவோம், மனித உரிமைகளுக்காக துணை நிற்போம்' என ஐ.நா., சபை அறிவித்திருக்கிறது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம்
மனித உரிமைகள் என்றால் என்ன என்ற கேள்விக்கு பன்னாட்டு மனித உரிமைகள் சாசனத்தின் பதில் சம உரிமையும், சுதந்திரமும் பிறக்கும் போதே உடன் பிறக்கின்றன. யார் ஒருவரையும் இனம், நிறம், மொழி, மதம், பிறப்பால் பாகுபாடு செய்யக்கூடாது. யாரும் யாருக்கும் அடிமை இல்லை. யாரும் சித்ரவதைக்கு உட்படலாகாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். நியாயமின்றி யாரையும் தடுத்து வைக்கக்கூடாது. நீதிமன்றத்தை அணுக குற்றம் நிரூப்பிக்கப்படும் வரை ஒருவரை நிரபராதி என கருதப்பட, அந்தரங்கங்களை பாதுகாக்க, சட்டத்திற்குட்பட்டு அனைத்து இடங்களுக்கும் செல்ல, சித்ரவதையிலிருந்து தப்பிக்க, புகலிடம் கேட்க, தேசிய அடையாளம் கேட்க, குடும்பம் நடத்த, சிந்தனை, சமய, கருத்து, மக்களாட்சி சேர்ந்திருக்க சமூக பாதுகாப்பு, விளையாட, ஓய்வெடுக்க, கல்விக்கு, உணவிற்குள்ள உரிமைகள் மனித உரிமைகளாகும்.
மனித உரிமை ஆணையங்கள்
இந்திய அரசு 1993 மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றியது. இச்சட்டத்தில் மனித உரிமைகள் என்பது அரசியலமைப்பு சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட அல்லது நீதிமன்றத்தால் அமல்படுத்தக்கூடிய பன்னாட்டு உடன்படிக்கை உள்ளிட்ட வாழ்வுரிமை, தனி மனித மாண்பு, சமத்துவம் தொடர்பான உரிமைகளாகும் என குறிப்பிட்டுள்ளது. மனித உரிமை மீறல்களை தடுக்க தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையம், மனித உரிமை நீதிமன்றங்கள் இச்சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப் பட்டன.ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தலைவராக கொண்டு தேசிய ஆணையம் டில்லியிலும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை தலைவராக கொண்டு மாநில ஆணையம் சென்னை ஆர்.ஏ.புரம், கீரீன்வேஸ் சாலை, பி.எஸ்.குமாரசாமி ராஜா ரோடு, 143, திருவரங்கன் மாளிகையிலும் செயல்படுகின்றன.
மனித உரிமை நீதிமன்றம்
மனித உரிமைகளை பாதுகாக்கவும், அதை பறிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்டவரோ அல்லது பிறரோ ஆணையருக்கு புகார் அளிக்கலாம்.மனித உரிமை மீறல் யாரால் எப்போது யாருக்கு எதிராக எவ்வாறு நடந்தது என்றும், அதற்கு என்ன தீர்வு வேண்டும் என்றும் குறிப்பிட்டு, புகாரை நிரூப்பிப்பதற்கான ஆதாரங்களை குறிப்பிட்டு, வேறு நீதிமன்றத்தில் புகார் இருந்தால் அதையும் குறிப்பிட்டு அனுப்பலாம்.ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மனித உரிமை நீதிமன்றமாக செயல்படுகிறது. மனித உரிமைகள் மீறலால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர விரும்பினால், முதலில் சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தனிநபர் புகாராக மனித உரிமை மீறலில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளுக்கு எதிராக பதிவு செய்ய வேண்டும். புகாரை பரிசீலனை செய்து, சாட்சிகளை விசாரணை செய்து மனித உரிமை மீறல் நடந்தது என்று கருதினால் மனித உரிமைகள் நீதிமன்றத்திற்கு புகார் அனுப்பப்படும்.
1996 முதல் 2010 வரை தமிழகத்திலிருந்து தேசிய மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 233 புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் இதே காலத்தில் தமிழகம் முழுவதுமுள்ள மனித உரிமை நீதிமன்றங்களில் 167 புகார்கள் மட்டுமே பதிவாயின. மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய மட்டுமே அதிகாரம் உள்ள மனித உரிமை ஆணையங்களை 99.9 சதவீதம் புகார்தாரர்கள் அணுகியுள்ளனர். ஆனால் சிறை தண்டனையும், அபராதமும் நேரடியாக விதிக்க அதிகாரமுள்ள மனித உரிமை நீதிமன்றங்களை 0.1 சதவீதம் நபர்களே அணுகிஉள்ளனர்.மனித உரிமை நீதிமன்றங்களில் வழக்கு தொடரும் போது, பாதிக்கப்பட்டவர்கள், சாட்சியங்களையும் நேரடியாக விசாரிக்கிறது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டு நீதிமன்றத்தில் சட்டபடியான
நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுகிறது. எப்படி ஒரு போலீஸ் ஸ்டேஷனில் ஒருவர் மீது குற்ற வழக்கு தொடரப்படுகிறதோ, அதுபோல மனித உரிமைகளை மீறிய எந்தவொரு அரசு அலுவலர்கள் மீதும் மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.
உயர்நீதிமன்றமும் மனித உரிமை நீதிமன்றமும்
இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகளை பாதுகாக்கவும், அதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு என்ற நீதிப்பேராணை மனுக்களை தாக்கல் செய்யலாம். உயர்நீதிமன்றம் தன் முன் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி தீர்ப்பினை வழங்குகிறது. சாட்சிகளை நேரடியாக விசாரிப்பதில்லை. உயர்நீதிமன்றத்தில் அதிகமாக வழக்குகள் நிலுவையில் உள்ளன. மனித உரிமை மீறல் நடந்தது நிரூப்பிக்கப்பட்டாலும், உயர்நீதிமன்றத்திற்கு நேரடியாக சிறை தண்டனை வழங்கும் அதிகாரம் இல்லை.
மனித உரிமை நீதிமன்றம் இந்திய தண்டனை சட்டம் மற்றும் பிற சிறப்பு சட்டங்களில் குறிப்பிட்ட சிறை தண்டனைகளை வழங்கும். பாதிக்கப்பட்டவர்களும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் சாட்சிகளையும், ஆவணங்களையும் சமர்ப்பிக்கலாம். குறுக்கு விசாரணை செய்யவும், ஆவணங்களை மறுக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்ட பிறகு தீர்ப்பு வழங்கப்படும். குற்றம் சாட்டப்பட்டவர் அரசு அலுவலர் என்பதற்காக சிறப்பு சலுகைகள் வழங்கப்படாது. மனித உரிமை நீதிமன்றத்தில் விசாரணைகளில் இரு தரப்பினரும் நேரடியாக ஆஜராக வேண்டும். வர முடியாத நாட்களில் காரணத்தை விளக்கி அனுமதி பெற வேண்டும். தகுந்த காரணமின்றி ஆஜராகாத அரசு அலுவலர் மீது பிடிகட்டளை மூலம் கைது செய்து ஆஜர்படுத்த மனித உரிமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கலாம்.நம்மை சுற்றி நடக்கும் மனித உரிமை மீறல்களை தடுத்து மக்களை பாதுகாக்க உரிய சட்டங்களும், பாதுகாப்பு நடைமுறைகளும் நம்மிடம் உள்ளன. அதை முறையாக அதிகமானோர் பயன்படுத்தினால் தான் நன்மைகள் கிடைக்கும். மக்களின் மனித உரிமைகள் அனைவராலும் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும். - முனைவர் ஆர்.அழகுமணிஉயர்நீதிமன்ற வழக்கறிஞர்மதுரை. 98421 77806
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE