சென்னை :ரஜினி புதிதாக ஆரம்பிக்க உள்ள கட்சிக்கு கொடி சின்னம் தயாராகி விட்டதாக மன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
அடுத்த ஆண்டில் நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட முடிவு எடுத்துள்ள ரஜினி டிச.31ம் தேதி கட்சி அறிவிப்பை வெளியிட உள்ளார். ஜனவரி முதல் முழு வீச்சில் அரசியல் களத்தில் இயங்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.கடந்த சில நாட்களாக இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ள ரஜினி தன் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமித்துள்ளார். 'முதல்வர் பதவியில் நான் இருக்க மாட்டேன்; கட்சிக்கு மட்டுமே தலைமை ஏற்பேன்' என ரஜினி ஏற்கனவே கூறியிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும் அது பற்றிய தன் இறுதி முடிவை ரஜினி இன்னமும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் அர்ஜுன மூர்த்தியும் தமிழருவி மணியனும் புதிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. ரஜினி குறித்த செய்தி மற்றும் பேட்டிகளில் அர்ஜுன மூர்த்தியை பிரதானப்படுத்தியதும் ரசிகர்கள் மன்றத்தில் சலசலப்பை உருவாக்கியது.முதல்வர் பதவிக்கு ரஜினி வந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம் என ரஜினி ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
இல்லையென்றால் அவர் கட்சி ஆரம்பித்தாலும் ரசிகர்களின் செயல்பாடு பெயரளவுக்கு தான் இருக்கும் என்கின்றனர்.இதனால் மக்கள் மன்றம் சார்பில் 'ரஜினி சார்ந்த பேனர் மற்றும் போஸ்டர்களில் அவரது படத்தை தவிர மற்றவர்கள் படத்தை பயன்படுத்த வேண்டாம்' என வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்நிலையில் ரசிகர் மன்ற கொடியை கட்சிக்கு பயன்படுத்தாமல் தனிக் கொடி தயாரிக்கும் பணி நடந்து வந்தது. அதேபோல் கட்சியின் சின்னமாக எதை தேர்வு செய்யலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டது. இதில் முடிவு எடுக்கப்பட்டு கட்சிக்கு கொடியும் சின்னமும் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் கட்சியை பதிவு செய்வதற்கு முன் நிர்வாகிகள் யார் என்பதையும் முடிவு செய்து விட ரஜினி விரும்புகிறார். அதற்கான பட்டியலையும் அவர் கைவசம் வைத்துள்ளார்.
சமீபத்தில் அவரது அண்ணன் சத்ய நாராயணனை பெங்களூரு சென்று சந்தித்த ரஜினி அவரின் ஆசி பெற்றதோடு கட்சி பெயர் கொடி நிர்வாகிகள் குறித்தும் ஆலோசித்துள்ளார்.இதற்கிடையே ரஜினி கட்சியில் சேர திரையுலகில் ஏராளமானோர் காத்திருக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE