பிரஷாந்த் கிஷோருக்கு எதிராக திரிணமுல் காங். கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் கிளம்பியுள்ள அதிருப்தி நாளுக்குநாள் தீவிரமடைவதால் அது வெளிப்படையாகவே வெடிக்க துவங்கியுள்ளது.
தமிழகத்தில் திமுக.வுக்கு சட்டமன்ற தேர்தலுக்கான வியூகத்தை பிரசாந்த் கிஷோர் வகுத்து தருவது போலவே மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரசுக்கும் அவர் தேர்தல் வியூக பணிகளை மேற்கொள்கிறார்.
இவரது நியமனத்தை கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ஆரம்பம் முதலே விரும்பவில்லை. இவரும் இவரது குழுவினரும் தங்களை பல்வேறு வழிகளில் கட்டுப்படுத்துவதாக கட்சியினர் புலம்ப ஆரம்பித்தனர்.வெளியில் தெரியாமல் இருந்த இந்த பிரச்னை மாநில போக்குவரத்து துறை அமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான சுவேந்த் அதிகாரியின் ராஜினாமாவால் வெளிச்சத்திற்கு வந்தது.
![]()
|
இவர் மேற்கு மித்னாபூர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் செல்வாக்கு மிக்கவர்.இந்நிலையில் மேலும் பல மூத்த தலைவர்கள் தாங்கள் ஓரங்கட்டப்படுதாக குற்றம் சாட்டி வருகின்றனர். மாநில வனத்துறை அமைச்சர் ராஜிப் பானர்ஜி '' மூத்த தலைவர்களின் கருத்துக்களை கட்சி மேலிடம் பொருட்படுத்துவதில்லை. தலைமையை புகழ்பவர்களுக்கு எல்லாம் கிடைக்கிறது. புகழ விரும்பாத நான் உட்பட பலரும் ஓரங்கட்டப்பட்டு வருகிறோம்'' என்றார்.அதேபோல மூத்த தலைவர் ஆதின் கோஷ் ''முக்கியத் தலைவர்கள் பலரும் மிகச் சாதாரணமாக நடத்தப்படுகின்றனர்'' என்றார்.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:திரிணமுல் காங்கிரசின் அமைச்சர்கள் எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் 10 பேர் பெரும் குமுறலில் உள்ளனர். தங்களின் குரல் எடுபடவில்லை என வருந்தும் இவர்கள் இதற்கெல்லாம் காரணம் பிரசாந்த் கிஷோர் என கூறுகின்றனர்.
பிரசாந்த் கிஷோரின் ஆட்கள் கட்சியில் பல்வேறு வழிகளில் ஆதிக்கம் செலுத்துவதாக கூறும் அவர்கள் இதுகுறித்து தகவல் அறிந்தும் முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர். தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் மம்தாவிடம் இப்பிரச்னை குறித்து விளக்கம் அளிக்க முடியாமல் பல தலைவர்கள் தவிக்கின்றனர்.-நமது டில்லி நிருபர்-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE