சென்னை:'நிவர்' புயல் நிவாரணப் பணிகளுக்கு, தமிழக அரசு முதல் கட்டமாக, 74.24 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.
வங்கக் கடலில் உருவான, 'நிவர்' புயல், நவ., 25ல், காரைக்கால், மாமல்லபுரம் இடையே, கரையை கடக்கும் என, 22ம் தேதி, வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில், பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 'நிவர்' புயல், 26ம் தேதி அதிகாலை, 2:30 மணிக்கு, புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது.
இப்புயல் காரணமாக, கடலோர மாவட்டங்களில், பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அப்பகுதிகளில், நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன. நிவாரணப் பணிக்காக, தமிழக அரசு முதல் கட்டமாக, 74.24 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.மனித இறப்புக்கு, நிவாரணம் வழங்க, 24 லட்சம் ரூபாய்; கால்நடைகள் இறப்புக்கு, 41 லட்சம்; குடிசை, வீடுகள் பாதிப்புக்கு, 59 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித் துறைக்கு, 20 கோடி ரூபாய்; வேளாண் துறைக்கு, 5 கோடி; தோட்டக்கலைத் துறைக்கு, 1 கோடி; நெடுஞ்சாலைத் துறைக்கு, சென்னை மாநகராட்சி, மின் வாரியம் ஆகியவற்றுக்கு, தலா, 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.மேலும், ஊரக வளர்ச்சித் துறைக்கு, 5 கோடி; சுகாதாரத் துறை, சென்னை குடிநீர் வாரியம், வனத் துறை ஆகியவற்றுக்கு, தலா, 2 கோடி ரூபாய்; மீன் வளத் துறைக்கு, 1 கோடி ரூபாய், நகராட்சி நிர்வாகத் துறைக்கு, 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இதற்கான அரசாணையை, வருவாய் நிர்வாகத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா பிறப்பித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE