சென்னை:'அரசு டாக்டர்கள், கொரோனா காலத்தில் ஆற்றிய, தன்னலமற்ற பணிகளை நினைவில் வைத்து, அவர்களது நீண்ட காலக் கோரிக்கையான, கால முறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வை, அரசு உடனே வழங்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்துவதில், தங்களின் உயிரை பணயம் வைத்து,தன்னலம் சிறிதுமின்றி,அரசு டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர்.அவர்களின் நியாயமான ஊதிய உயர்வு கோரிக்கையை, அ.தி.மு.க., அரசு நிறைவேற்றாமல், அலட்சியம் செய்வது,
மிகுந்த கண்டனத்துக்கு உரியது.போராட்டம் நடத்திய அரசு டாக்டர்கள், அரசின் வேண்டுகோளை ஏற்று, பணிக்கு திரும்பினர். அவர்களில், 118 பேரின் மாறுதல் உத்தரவை, எட்டு மாதங்களுக்கு பின், நீதிமன்றத்தின் தலையீட்டால், அரசு ரத்து செய்தது. ஆனால், அந்த டாக்டர்கள் மீது எடுத்த, துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கையை, இன்று வரை ரத்து செய்யவில்லை.
அரசு டாக்டர்கள் கோரிய ஊதிய உயர்வை அளிக்கவும் இல்லை; பேச்சு நடத்தவும் அழைக்க வில்லை. உயர் நீதிமன்றம் தலையிட்டு, ஒரு நபர் குழு நியமித்து, 'உடனே நடவடிக்கை எடுங்கள்' என, அ.தி.மு.க., அரசுக்கு அறிவுறுத்தியும் கூட, இதுவரை கண்டுகொள்ளவில்லை. மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதிய உயர்வு, தமிழக அரசு டாக்டர்களுக்கு கிடைக்க, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவு பிறப்பிக்க வேண்டும். முதுநிலை மற்றும் உயர் சிறப்பு தகுதி மருத்துவக் கல்வியில், அரசு டாக்டர்களுக்கு, 50 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகள் மீதும், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE