ராமநாதபுரம், : ராமநாதபுரம் பகுதியில்நெற்பயிர்களில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் காணப்படுவதால் உரிய தடுப்பு நடவடிக்கை மருந்து தெளிக்க வேளாண் இணை இயக்குனர் குணபாலன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 நாட்களாக நிவர் மற்றும் புரெவி புயலின்எதிரொலியாக குளிர்ச்சியான பருவ நிலை நிலவுகிறது. இச்சூழலில் நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய்கள் தென்பட அதிக வாய்ப்புள்ளது. மழைநீர் தேங்கிய பகுதிகளில் நீர் வடிந்தவுடன் விவசாயிகள் பயிர் பாதுகாப்பு முறையினை பின்பற்றவேண்டும். பிபிடி., 5204 மற்றும் சி.ஆர்.1009 ஆகிய நெல் ரகங்களில் பூச்சி பாதிப்பு அதிகமாக காணப்படும்.
நடப்பு சம்பா பருவத்தில் நெற்பயிருக்கு மேகமூட்டமான வானிலை, விட்டுவிட்டு பெய்யும் தூறல், அதிகப்படியான ஈரப்பதம் ஆகிய தட்பவெட்ப மாறுதலால் ஆனைக்கொம்பன் ஈ என்ற பூச்சியின் தாக்குதல் ஏற்பட வாய்ப்புஉள்ளது.45வது நாள் முதல் துார்வெடிக்கும் பருவத்தில் இப்பூச்சியின் தாக்குதல்அதிகம் இருக்கும். கொசுவைப் போல சிறியதாகவும் மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலும் மெல்லியக் கால்களுடன் காணப்படும். இந்த ஈ தாக்குதலினால் நெற்பயிரில் துார்களுக்கு பதிலாக கொம்பு போன்ற கிளைப்புகள் வெண்மை நிறத்திலோ அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலோ வெங்காய இலையைப் போல தோன்றும்.
பார்ப்பதற்கு யானையின் தந்தம்போன்ற தோற்றம் இருக்கும்.பூச்சியை அழிக்க வழிநெல் வயலில் களைகள் இல்லாமல் துாய்மையாக வைத்திருக்க வேண்டும். விளக்குப் பொறிகளால் தாய்ப்பூச்சிகளை கவர்ந்தழிக்கலாம். பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே தழைச்சத்து மற்றும் பொட்டாஷ், உரத்தினை இடவேண்டும். ஆனைக்கொம்பனின் இயற்கை எதிரிகளான நீலத்தாடை சிலந்தி, வட்ட சிலந்தி, ஊசித்தட்டான், குளவி போன்றவற்றை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும். 10 சதவீதத்திற்கு மேல் தாக்குதல் தென்பட்டால் ரசாயன மருந்து மற்றும்குருணை மருந்தை தேவையான அளவு மணலுடன் கலந்து வயலில் இட்டு கட்டுப்படுத்தலாம், விபரங்களுக்கு வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குனர் குணபாலன் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE