சென்னை:''டி.என்.பி.எஸ்.சி., தேர்வு, உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்,'' என, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
தலைமை செயலகத்தில், அவர் அளித்த பேட்டி:எம்.ஜி.ஆர்., ஆட்சி, லட்சியம் எல்லாம், எங்களுக்கு மட்டும் பிரத்யேகமானது. மற்ற கட்சிகள், எங்கள் தலைவரை இரவல் வாங்குகின்றனர் என்றால், அவர்கள் கட்சியில் தலைவர் இல்லை என்று அர்த்தம்.இறந்தவர் குறித்து பேசுவது பண்பாடல்ல என்று, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தி.மு.க.,வுக்கும், ராஜாவுக்கும் பண்பாடில்லை.
ஜெ., வழக்கு முடிந்து போனது. இவர் மீது, வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.ஜோதி ஒரு வழக்கறிஞர்; அவருடன் ராஜா மோதலாம். ஜோதி தயாராக உள்ளார். ராஜா எந்த இடம் என்று சொன்னால், நான் மேடை அமைத்து, அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறேன். வழக்கறிஞர் ஜோதியை அழைத்து வருகிறேன். அதற்கு ராஜா தயாரா? முதலில் ஜோதியின் கேள்விக்கு, பதில் அளிக்கட்டும்.
'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், ராஜா தீர்ப்பு எழுதிவிட்டது போல பேசுகிறார். ராஜா உத்தமரா, இல்லையா என, உச்ச நீதிமன்றம் தான் தெரிவிக்க வேண்டும்.தி.மு.க., தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுகிறது; நாகரிகமான அரசியலில் ஈடுபட வேண்டும். எங்கள் மேல் சேற்றை அடித்தால், நாங்களும் அடிப்போம். டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 4' கவுன்சிலிங் முடிந்துள்ளது. கொரோனா குறைந்து வருவதால், தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. எனவே, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE