சென்னை:''தமிழகத்தின் பெருநகரங்களில், வானளாவிய வழித்தடங்களை அறிமுகம் செய்ய வேண்டும்,'' என, மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத் தலைவர் பொன்னையன் தெரிவித்தார்.
'நகர்ப்புற வழித்தடம் - பயன்பாடு மற்றும் இணைய தடம்' குறித்து, சென்னை, எழிலகத்தில், நேற்று நடந்த கருத்தாய்வு கூட்டத்தில், அவர் பேசியதாவது:பொது போக்குவரத்து என்பது, காலத்திற்கு ஏற்ப, குறைந்த கட்டணத்தில், வசதி உடையதாகவும், எல்லா மக்களும் தேர்வு செய்யக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
புதிதாக வரவிருக்கும், மாநில நகர்ப்புற போக்குவரத்து கொள்கை, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற, பொது போக்குவரத்து விரிவாக்கத்திற்கு அடிகோலிடும்.சொகுசு வாகனங்களுக்கான, பல்லடுக்கு வாகன நிறுத்தம், அதன் மேலாண்மை, வாகனங்களை தெருக்களிலும், கிடைத்த இடத்திலும், நிறுத்தி வைப்பதை தவிர்க்க, சிறந்த வழியாகும்.
மினி பஸ்களை அறிமுகம் செய்வதன் வழியே, மாசு, காலநிலை மாற்றம் தவிர்த்தல், குடி மக்களின் உடல்நலக்கேடு ஆகியவற்றில் நன்மை பயக்கும்.தமிழகத்தில், பெரு நகரங்களான சென்னை, மதுரை, திருச்சி, கோவையில், 'ஸ்கைவே காரிடார்' எனப்படும் வானளாவிய வழித்தடங்களை, அறிமுகம் செய்ய வேண்டும்.
இதனால், வேகமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து, பயண நேரம், எரிபொருள் பயன்பாடு, வாகன நெரிசல், விபத்து போன்றவற்றை குறைக்கலாம். இவ்வாறு, பொன்னையன் பேசினார்.கூட்டத்தில், மாநில வளர்ச்சி கொள்கைக் குழு உறுப்பினர் செயலர் அனில் மேஷ்ராம், போக்குவரத்து துறை அரசு துணைச் செயலர் பிரபாகர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE