சென்னை:பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமிக்கு எதிரான, அவதுாறு வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும்போது, அந்த நாட்டு அதிபரிடம் பேசி விடுவித்ததாகவும், ஆனால், பிரதமருக்கு வெறுமனே கடிதம் மட்டுமே, முதல்வர் எழுதி வருவதாகவும், சுப்ரமணியசாமி கூறியிருந்தார். 2014 செப்டம்பரில், பத்திரிகைகளில் இந்த செய்தி வெளியானது.
இதையடுத்து, சுப்ரமணியசாமி மற்றும் பத்திரிகைகளுக்கு எதிராக, தமிழக அரசு, அவதுாறு வழக்குகள் தொடர்ந்தது. தனக்கு எதிரான அவதுாறு வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சுப்ரமணியசாமி மனு தாக்கல் செய்தார்.இம்மனு, நீதிபதி சதீஷ்குமார் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
சுப்ரமணியசாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவி, பத்திரிகைகளுக்கு எதிராக அவதுாறு வழக்கு தொடர பிறப்பித்த அரசாணையை,உயர் நீதிமன்றம் ரத்து செய்திருப்பதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, சுப்ரமணியசாமிக்கு எதிரான அவதுாறு வழக்கையும் ரத்து செய்து, நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார். 'உரிய முகாந்திரம் இன்றி தாக்கல் செய்யப்படும் அவதுாறு வழக்குகளுக்கு, அபராதம் விதிக்கப்படும்' எனவும் நீதிபதி எச்சரித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE