சென்னை:நாட்டில் முதன் முறையாக, சென்னை ஐ.ஐ.டி.,யில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள, பி.எஸ்சி., 'ஆன்லைன்' படிப்பில், 8,000 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கணினி தொழில்நுட்பம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ள நிலையில், அதில் விருப்பம் உள்ளவர்களுக்கு, 'டேட்டா சயின்ஸ்' என்ற பெயரில், பி.எஸ்சி., பட்டப்படிப்பை, சென்னை ஐ.ஐ.டி., அறிமுகம் செய்துள்ளது. முழுதும் ஆன்லைன் வழியே நடத்தப்படும் இந்த படிப்பானது, பல்வேறு கட்டங்களாக அமைக்கப்பட்டு உள்ளன.அடிப்படை படிப்பு, டிப்ளமா மற்றும் பட்டப்படிப்பு என, மூன்று கட்டங்களாக மாணவர்கள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு, ஆன்லைன் வழியே, 'வீடியோ' பாடங்கள் நடத்தப்படுகின்றன.
இந்த படிப்பில், முதலாம் ஆண்டு ஆன்லைன் பதிவு முடிந்துள்ளது. இதில், பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றும், 8,154 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். நாடு முழுதும் இருந்து, 1,922 பெண்கள், இந்த படிப்பில் சேர்ந்துள்ளனர்.
இந்த படிப்புக்கு மொத்தம், 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில், 8,154 பேர் மட்டும் தகுதி சுற்றில் தேர்வு பெற்றுஉள்ளனர். தகுதி பெற்றவர்களில், 3,450 பேர் இன்ஜி., படிப்பையும், 1,593 பேர் கலை, அறிவியல் படிப்பையும் பின்னணியாக கொண்டவர்கள். இந்த படிப்பு குறித்த தகவல்களை, www.onlinedegree.iitm.ac.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE