பொள்ளாச்சி : பொள்ளாச்சி பகுதியில் கத்தரி பயிரில் ஏற்படும் பூச்சி, நோய் தாக்குதலை தவிர்க்க, மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகள் குறித்து, தோட்டக்கலை துறை அறிவுரை வழங்கியுள்ளது.
பொள்ளாச்சி பகுதியில் கத்தரிக்காய் சாகுபடி அதிகரித்துள்ளது. கத்தரி பயிரில் பூச்சி, நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த, தெற்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் சவுமியா ஆலோசனை வழங்கியுள்ளார்.
அவர் கூறியதாவது:கத்தரி பயிரை, ஹட்டா வண்டு, அசுவனி, தண்டு மற்றும் காய் துளைப்பான், சிகப்பு சிலந்தி, வேர் முடிச்சு, நுாற்புழு அதிகம் தாக்குகின்றன. அதே போன்று, கருகல் நோய் மற்றும் காய் அழுகல் நோய், சிற்றிலை நோய் ஆகியவை அதிகம் பாதிக்கும்.இவற்றை தவிர்க்க, நிலப் பரப்பிலிருந்து,10 செ.மீ.,உயரமுள்ள மேட்டுபாத்தி நாற்றாங்காலிலே விதைக்க வேண்டும். மழையால் ஈரப்பதம் அதிகமுள்ள காலங்களில், நாற்றுப்பாத்தியை பாலித்தீன்ஷீட் கொண்டு மூடிவைக்க வேண்டும்.இதனால், மண் வெப்பமூட்டப்பட்டு, மண் சார்ந்த நோய், பாக்டீரியா வாடல் நோய் மற்றும் நுாற்புழு ஆகியவற்றை கட்டுப்படுத்தும்.
டிரைகோடெர்மா விரிடியை பயன்படுத்துவதன் மூலம், புஞ்சான நோய்களை கட்டுப்படுத்தலாம்.கத்தரி வயலில், பூச்சிகளைஉட்கொள்ளும் பறவைகள் நிற்பதற்காக ஒரு ஏக்டருக்கு, 10 பறவை நிற்கும் குச்சிகளை வைக்க வேண்டும். தத்து பூச்சி, அசுவனி மற்றும் வெள்ளை ஈ போன்றவற்றை கட்டுப்படுத்த, ஒரு ெஹக்டேருக்கு இரண்டு முதல் மூன்று ஒட்டுப் பொறிகளை அமைக்க வேண்டும்.சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த,வேப்பங்கொட்டை கரைசலை தெளிக்க வேண்டும். இதனால், துளைப்பான் பாதிப்பையும் குறைக்க முடியும். தண்டு மற்றும் காய் துளைப்பானை கட்டுப்படுத்த, ெஹக்டேருக்கு ஐந்து என்ற வீதத்தில் இனக்கவர்ச்சி பொறி வைக்க வேண்டும்.
நுாற்புழு மற்றும் துளைப்பான் சேதத்தை கட்டுப்படுத்த, செடிகளின் வரிசையில், ஒரு ஹெக்டேருக்கு, 250 கிலோ வேப்பம்புண்ணாக்கை, நடவு செய்த, 25 மற்றும், 60 நாட்களில் மண்ணில் இட வேண்டும்.துளைப்பானால் பாதிக்கப்பட்ட தண்டு மற்றும் காய்களை சேகரித்து, அழித்து துளைப்பானை கட்டுப்படுத்தலாம். தொடர்ந்து கத்தரி பயிரிடுவதாலும், துளைப்பான் பாதிப்பு அதிகம் இருக்கலாம். எனவே கத்தரி குடும்பத்தில் சேராத பயிரை சுழற்சி முறையில் சாகுபடி செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE