பொள்ளாச்சி : பொள்ளாச்சி ஒன்றியங்களில், அம்மா ஸ்கூட்டர் மானியத்திட்டத்தில் பயன் பெற, தகுதியுள்ள பெண்களின் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
தமிழகத்தில், பணிபுரியும், சுய தொழில் செய்யும் பெண்களின் முன்னேற்றத்துக்காக, ஸ்கூட்டர் வாங்க அரசு மானியம் வழங்குகிறது. நடப்பாண்டில், மானியம் வழங்க ஒன்றியங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தில், 18 முதல், 45 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருவாய், 2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதில், 125 சி.சி., திறனுக்கு மிகாத ஸ்கூட்டர் வாங்க, விலையில், 50 சதவீதம் அல்லது, 25,000 ரூபாய் எது குறைவோ, அந்த தொகை மானியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் பெண்கள், இருசக்கர வாகனம் ஓட்ட லைசென்ஸ் அல்லது எல்.எல்.ஆர்., வைத்திருக்க வேண்டும். பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கு நடப்பாண்டில், 119 பயனாளிகள்; வடக்கு ஒன்றியத்துக்கு, 149 பயனாளிகளுக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 17 சதவீதம் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கென தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட ஸ்கூட்டர் வாங்கவும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
மானியத்தில் பயனடைய விரும்பும் பெண்கள், வயது வரம்புச்சான்று நகல், இருப்பிடச்சான்று நகல், இருசக்கர வாகன ஓட்டுனர் உரிம நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, பணியில் இருப்பதற்கான சான்றிதழ், ஆதார் அட்டை நகல், கல்வித்தகுதிக்கான சான்றிதழ் நகல்கள், ஜாதிச்சான்றிதழ், இருசக்கர வாகனத்திற்கான கொட்டேஷன் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விபரங்களுக்கு, ஒன்றிய அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE