பொள்ளாச்சி : கேரளாவில் இருந்து பரவும் மாட்டம்மை எனப்படும் பெரியம்மை நோயில் இருந்து, மாடுகைளை பாதுகாக்க, ஈ, கொசு மற்றும் உண்ணிகளை அழித்து, தொழுவத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என, ஓய்வுபெற்ற கால்நடை உதவி இயக்குனர் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
கேரளா எல்லையே ஒட்டிய, பொள்ளாச்சி மேற்கு பகுதியில், விவசாயிகள் வளர்க்கும் மாடுகளுக்கு, சமீப காலமாக, லம்ப்பி ஸ்கின் டிசீஸ் எனப்படும் பெரியம்மை நோய் வேகமாக பரவி வருகிறது.இந்நோய், நாட்டு மாடுகள் மட்டுமின்றி, அனைத்து இன மாடுகளையும் தாக்குகிறது. இது வைரஸ் கிருமிகளால் தோன்றுகிறது. நோயானது ஈ, கொசு மற்றும் உண்ணிகளால் பரவுகிறது.மாட்டம்மை நோய் பரவல் குறித்து, ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் நாகராசன் கூறியதாவது:நோய் பாதித்த மாடுகளுக்கு, அதிக காய்ச்சல், உடல்சோர்வு, உடல் மற்றும் கால்களில் வீக்கம், கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, சினைமாடுகளில் கருச்சிதைவு ஆகியன ஏற்பட்டு, விவசாயிகளுக்கு பெரும் இழப்பை கொடுத்து வருகிறது. முக்கியமான அறிகுறியாக,உடல் முழுதும் உருண்டையான தோல் கொப்புளங்கள் காணப்படுகிறது.நோய் தடுப்புமுறைநோயை உண்டாக்கும் ஈ, கொசு, உண்ணி போன்றவற்றை அழிக்க, தகுந்த உண்ணி மருந்துகளை வாரம் ஒருமுறை மாடுகளுக்கும், மாட்டு தொழுவத்திலும் அடிக்க வேண்டும்.
தினமும் புகை போட்டு, பூச்சி பரவலை கட்டுப்படுத்த வேண்டும். நோய் பாதித்த மாடுகளை தனியாக பராமரிக்க வேண்டும். நோயானது, 10 - 15 தினங்கள் வரை இருக்கும். நோய் தீர்வுக்கு, காய்ச்சல் மருந்து, வலி நிவாரண மருந்துகளை பயன்படுத்தலாம். தவிர, நாட்டு மருந்துகளையும் பயன்படுத்தலாம். 10 எண்ணிக்கையில் வெற்றிலை, மிளகு 10 கிராம், கல்உப்பு 10 கிராம் மற்றும் தேவையான அளவு வெல்லம் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, வாய் வழியாக நாள் ஒன்றுக்கு மூன்று முறை கொடுக்க வேண்டும்.
மேலும், மாடுகளுக்கு மேல்பூச்சாக குப்பைமேனி, வேப்பிலை, துளசி, மருதாணி இலைகளுடன் மஞ்சள் துாள், 10 பூண்டுகள், வேப்ப எண்ணெய் அல்லது நல்லெண்ணெய், 500 மில்லியுடன் சேர்த்து அரைத்து கொதிக்க வைக்க வேண்டும். சூடு குறைந்தவுடன் புண்கள், கொப்புளங்கள் மீது தடவி வந்தால் விரைவில் காயங்கள் குணமாகிவிடும். இம்முறைகளை கையாண்டால், பெரியம்மை நோய் பரவுவது தடுக்கப்பட்டு, கால்நடைகளை பாதுகாக்கலாம்.இவ்வாறு, தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE