பொள்ளாச்சி : நெகமம் அருகே, கப்பளாங்கரையில் ரோட்டோரம் இருந்த, ஆபத்தான புளியமரம் வெட்டி அகற்றப்பட்டது.
நெகமம் - வடசித்துார் ரோட்டில், கப்பளாங்கரை கிராம நுாலகம் எதிரே, 120 ஆண்டுகள் பழமையான ரோட்டோர புளியமரம் நிழல் கொடுத்து வந்தது.இந்நிலையில், நேற்று காலை திடீரென கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில், புளியமரம் வெட்டி சாய்க்கப்பட்டது. முன்னதாக, ரோட்டில் தடை ஏற்படுத்தப்பட்டு, மாற்றுப்பாதையில் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.மக்கள் கூறியதாவது:புளியமரத்தின் அடிப்பாகம், பல ஆண்டுகளாக பலமிழந்து, பொந்து போல் காணப்பட்டது.
மரத்தடியில் குழந்தைகள், பெரியவர்கள் கூடுவதால், ஆபத்து ஏற்படும் அபாயம் நிலவியது. பலமான காற்று வீசும்போது, மரம் விழுந்தால், பெரும் விபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில், மரத்தை வெட்டி அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்தனர்.கப்பளாங்கரை வி.ஏ.ஓ., குணசேகரன் பரிந்துரையின் பேரில், கிணத்துக்கடவு தாசில்தார் மரத்தை வெட்டி, அகற்ற அனுமதி அளித்தார். நேற்று காலை மரம் வெட்டும் பணி, வி.ஏ.ஓ., முன்னிலையில் துவங்கியது. மரங்கள் துண்டு போட்டு அகற்றப்பட்டதால் வாகனங்கள் வழக்கம் போல அனுமதிக்கப்பட்டன.
ஏற்கனவே, கிராமத்தில் பழமையான மரங்கள் சில வெட்டப்பட்டன. ஆனால், புதிய மரக்கன்றுகள் நடவு செய்யவில்லை. வெட்டிய மரங்களுக்கு மாற்றாக புதிய மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE