சூலுார் : அவிநாசி சாலையில் ஊத்துப்பாளையம் பிரிவு மற்றும் கோழிப்பண்ணை அருகே இரு மேம்பாலங்கள் கட்டும் பணி தீவிரமாக நடக்கின்றன.
தேசிய நெடுஞ்சாலையான அவிநாசி சாலை, கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. கருமத்தம்பட்டி, ஊஞ்சப்பாளையம், கணியூர், செல்லப்பம்பாளையம் பகுதியில் சிறு மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இதனால், அக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் வாகனங்கள், சாலையை எளிதாக கடந்து சென்று வருகின்றன. ஆனால், கொள்ளுப் பாளையம் பிரிவு, ஊத்துப்பாளையம் பிரிவு ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் கட்டவில்லை.
இதனால், சங்கோதிபாளையம், ஊத்துப்பாளையம், கொள்ளுப்பாளையம் உட்பட மூன்று கிராம மக்கள் அவிநாசி சாலையை கடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.வாகனங்களில் செல்வோர் ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்துக்கு செல்ல, ஆறு கி.மீ., தூரம் சுற்றி வரவேண்டிய நிலை ஏற்பட்டது. நடந்து சென்று சாலையை கடக்க முயன்ற பலர், அவ்வப்போது விபத்தில் சிக்குகின்றனர்.
இதையடுத்து, பா.ஜ., பிரமுகர் முருகேசன் மற்றும் உள்ளூர் இளைஞர்களின் இடைவிடாத முயற்சியால், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், கோழிப்பண்ணை மற்றும் ஊத்துப்பாளையம் பிரிவில், இரு மேம்பாலங்கள் கட்ட ஒப்புதல் அளித்து, ரூ.30 கோடி நிதியும் ஒதுக்கியது. முதற்கட்டமாக, கோழிப்பண்ணை அருகே ரூ.12 கோடி மதிப்பில் துவங்கிய மேம்பால கட்டுமான பணிகள், தற்போது நிறைவு பெறும் நிலையில் உள்ளன.
அதன் பின் துவக்கப்பட்ட ஊத்துப் பாளையம் பிரிவு மேம்பாலப்பணிகள், 50 சதவீதம் அளவுக்கு முடிந்துள்ளன. இதனால், மூன்று கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், 'மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE