அன்னுார் : 'சிறுதானியம் பயிரிட்டால் நல்ல வருமானம் பெறலாம்' என, விவசாயிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அன்னுார் வட்டார 'அட்மா' விவசாயிகள் கூட்டம் நேற்று நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ''மானாவாரி மேம்பாட்டு திட்டம் உட்பட பல திட்டங்களில், கோடை உழவு செய்யவும், சொட்டுநீர் பாசனம் அமைக்கவும், இடுபொருட்கள் வாங்கவும் மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
சொட்டுநீர் பாசன துணை இயக்குனர் சபீர் அகமது பேசுகையில், ''மழை குறைவாக உள்ள நிலையில், சொட்டுநீர் கருவி அமைப்பதன் வாயிலாக, குறைவான நீரில், அதிக பரப்பில் பயிர் செய்யலாம். அனைத்து விவசாயிகளும் தவறாமல், சொட்டு நீர் பாசனம் அமைத்து கொள்ள வேண்டும்,'' என்றார்.
வேளாண் விஞ்ஞானி சுரேஷ் பேசுகையில், ''வளம் குறைவாக உள்ள மண்ணிலும், சிறுதானியங்களை பயிரிடலாம். இதில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைவு மானாவாரியாக பயிரிடுவதற்கு ஏற்றது. சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி விற்கும் போது, மேலும் நல்ல வருமானம் பெறலாம்,'' என்றார்.
வேளாண் பொறியியல் விஞ்ஞானி நாகராஜ் பேசுகையில், ''சொட்டுநீர் பாசன கருவிகளை சரியான கால இடைவெளியில் பராமரிக்க வேண்டும்,'' என்றார்.
மேலும், வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறை, மக்காச் சோளத்தில் உள்ள படைப்புழுக்களை ஒழிப்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.பயறு சாகுபடியில் புதிய தொழில் நுட்பங்களை பின்பற்றினால், ஒரு ஏக்கருக்கு, 500 கிலோ பயறு விளைச்சல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.
சொட்டுநீர் பாசனம் மற்றும் இடுபொருட்கள் குறித்த கண்காட்சி நடந்தது. வேளாண் அலுவலர் திவ்யா, துணை வேளாண் அலுவலர் முருகன், உதவி வேளாண் அலுவலர் சுகன்யா மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரண்யா, உதவி மேலாளர்கள் பிரபு, தினகரன் ஆகியோர் செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE