பெ.நா.பாளையம் : மழைக்காலத்தில் மின்பொருட்களை பாதுகாப்புடன் பயன்படுத்தவும், மின் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:மழை, பெருங்காற்று வீசும்போது, அறுந்து விழுந்த மின்சார கம்பியின் அருகே செல்ல வேண்டாம். அதே போல, மழைக்காலத்தில் டிரான்ஸ்பாமர், மின்கம்பிகள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் அருகே செல்லக்கூடாது. டிரான்ஸ்பாமரில் பியூஸ் போயிருந்தால், அதை சரி செய்ய, மின் ஊழியரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
தாங்களாகவே 'பியூஸ்' மாற்ற முயற்சி செய்யக்கூடாது. மரக்கிளைகள், மின்கம்பியை தொடும் வரை வளரவிடக்கூடாது. வளர்ந்த மரங்களை மின் ஊழியர், உதவியுடன் வெட்டி அகற்ற வேண்டும். மின்கம்பங்களுக்கு அருகில் கட்சி கொடிக்கம்பங்களையும், விளம்பர பேனர்களையும் வைக்கக்கூடாது. அரசு உரிமம் பெற்ற ஒப்பந்தாரர் வாயிலாக மட்டுமே, மின்சார ஒயரிங் செய்ய வேண்டும். தரமான நட்சத்திர குறியிட்ட, மின்சாதனங்களையே பயன்படுத்த வேண்டும். மின்கசிவு தடுப்பானை பயன்படுத்தி, மின்கசிவினால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கலாம்.
ஒவ்வொரு மின் இணைப்பிலும், சரியான நில இணைப்பு செய்ய வேண்டும்.குளியலறை, கழிப்பறை மற்றும் ஈரமுள்ள இடங்களில் சுவிட்ச் அமைக்கக்கூடாது. ஈரமுள்ள கையினால் சுவிட்களை இயக்க கூடாது. மின்கம்பிகளுக்கு, கீழே வாகனத்தை நிறுத்தி, பொருட்களை ஏற்றவோ, இறக்கவோ கூடாது.இடி, மின்னலின் போது, மொபைல் போன், 'டிவி', மிக்சி, கிரைண்டர், கம்ப்யூட்டர், போன் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டாம். மின்கம்பிகளின் அருகில் பட்டம் விடக்கூடாது.
மீட்டர் போர்டு சுமார், 5 அடிக்கு குறையாமலும், அதிகமாக இருக்காமலும் அமைக்க வேண்டும். ஜெனரேட்டர் பயன்படுத்தும் போது, நான்குமுனை சேன்ஜ் ஓவர் சுவிட்ச்களை பயன்படுத்த வேண்டும்.மின்கம்பங்கள் மற்றும் அதன் ஸ்டே ஒயர்களில் ஆடு, மாடுகளை கட்டக்கூடாது. பயிர்களுக்கு நாசம் செய்யும் விலங்குகளுக்கு, மின்சார வேலி அமைக்கக் கூடாது. இது தண்டனைக்குரிய குற்ற செயல்.மீறினால், அபராதம் மற்றும் சிறைதண்டனை கிடைக்கும். திருவிழாக்காலங்களில் ஊர்வலம் வரும் தேரின் அளவு, 15 அடிக்கும் குறைவாக அமைக்க வேண்டும். தாங்களாகவே மின்கம்பிகளை துாக்கக்கூடாது. இவ்வாறு, அவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE