திருப்பூர் : 'மாவட்ட மைய நுாலகம், கிளை நுாலகம் செயல்படும் நேரத்தை பழைய முறைப்படி மாற்றியமைக்க வேண்டும்,' என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கொரோனா தாக்கம் சற்று குறைந்ததால், வழிகாட்டு நெறிமுறைப்படி, ஒவ்வொரு துறையிலும், மக்கள் கூடும் இடங்களிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இயல்பாக பொது இடங்களில் அனைவரும் நடமாட துவங்கி விட்டனர்.ஆனால், நுாலகங்கள் திறப்பு, செயல்படும் நேரத்தில் இன்னமும் மாற்றம் செய்யவில்லை. கொரோனால் நான்கு மாதம் இழுத்து மூடப்பட்ட நுாலகம் தற்போது காலை, 8:00 மணி முதல் மதியம், 2:00 வரை செயல்படுகிறது.
நுாலகத்தில் இருந்து புத்தகங்களை எடுக்க, உறுப்பினர் சேர்க்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நாளிதழ், வார இதழ்களை அமர்ந்து படிக்க வாசகர்களை அனுமதிப்பதில்லை.ஒவ்வொரு துறைக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு அதற்கேற்ப தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், நுாலகங்கள் காலை, 10:00 முதல் இரவு, 7:00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்க வேண்டும்.
சுகாதார விதிகளை பின்பற்றி, அனைவரும் நுாலகத்துக்கு சென்று நாளிதழ் படிக்க அனுமதியளிக்க வேண்டும் என, வாசகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE