கோவை : நாடு முழுவதும் நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளில், இன்ஜி., மாணவர்களை பங்கேற்க வைக்க புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
உயர்கல்வி நிறுவனங்களுக்கும், தொழில்துறையினருக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்த, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இதன் ஒரு பகுதியாக, தொழில்நுட்பகல்வி நிறுவனங்களை தங்களுடன் இணைக்கும் புதிய திட்டத்தை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
இத்திட்டத்தின்படி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் கோவை, கே.பி.ஆர்., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி சிவில் இன்ஜி., துறை இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளது.இத்திட்ட இயக்குனர் பிரசாந்த்குமார் சின்ஹா கூறுகையில், ''அங்கீகரிக்கப்பட்ட இன்ஜி., துறை பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய குழு, அவ்வப்போது தொடர் ஆய்வு மேற்கொண்டு, சாலை பாதுகாப்பில் தற்போதுள்ள குறைபாடுகளை களைய, புதிய பரிந்துரைகளை மேற்கொள்வர்.
சாலை பயனாளிகள் மற்றும் வாகன வகைகளின் வசதிக்கேற்ப சாலையோர வசதிகள் மேம்பாடு குறித்து, நெடுஞ்சாலை துறைக்கு இந்த மாணவர் குழு அறிவுறுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.
கே.பி.ஆர்., கல்லுாரி முதல்வர் அகிலா கூறுகையில், ''கோவை - சத்தியமங்கலம் இடையிலான தேசிய நெடுஞ்சாலை, நான்கு மற்றும் ஆறு வழிச்சாலை, கோவை மற்றும் தமிழக - கர்நாடக எல்லை பகுதி வரை நீளும், இரண்டு வழிப்பாதை மாணவர்கள் உள்ளிருப்பு பயிற்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட சாலை பிரிவில், ஐந்து ஆண்டுகளுக்கு கள ஆய்வு மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு, தேசிய நெடுஞ்சாலை துறையில் மேற்கொள்ளப்படும் நவீன தொழில்நுட்பம் குறித்த, முழுமையான பயிற்சி அளிக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE