கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம், 28வது வார்டில், நில அளவை எண்: 282ல், 5 ஏக்கரில், 54 மனைகளுடன் லே-அவுட் அமைந்திருக்கிறது. பூங்காவுக்காக, 21,981 சதுரடி, கடைக்காக, 2,409 சதுரடி ஒதுக்கப்பட்டு, 1993ல் உள்ளூர் திட்ட குழுமத்தில் வரைபட அனுமதி பெறப்பட்டுள்ளது.
பூங்காவுக்கு ஒதுக்கிய இடத்தை ஒருவர் ஆக்கிரமித்து, சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தி வருகிறார். அவ்விடத்துக்கு பதிலாக, வேறொரு இடத்தை பரிவர்த்தனை செய்து தருவதாக, மாநகராட்சிக்கு ஆக்கிரமிப்பாளர் தெரிவித்துள்ளார். மாநகராட்சி சொத்து ஆக்கிரமிப்பில் சிக்கியிருப்பது தொடர்பாக, கடந்த, 7ம் தேதி நமது நாளிதழில், விரிவாக செய்தி வெளியிடப்பட்டது.
இது தொடர்பாக, நடவடிக்கை எடுக்க, கமிஷனர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். வடக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி தலைமையிலான அலுவலர்கள், நேற்று அங்கு சென்று, நில அளவை செய்யாமல், 'இது, மாநகராட்சிக்கு சொந்தமான இடம்' என, பெயரளவுக்கு அறிவிப்பு பலகை மட்டும் வைத்தனர்.அதேபோல், ஆக்கிரமிப்பாளர் வீட்டின் சுற்றுச்சுவரிலும் அறிவிப்பு பேனர் ஒட்டினர். அதிகாரிகள் கிளம்பிய சிறிது நேரத்திலேயே, அந்த பேனர் கிழிக்கப்பட்டு விட்டது.
மாநகராட்சிக்கு சொந்தமான சொத்தை மீட்க, நகரமைப்பு பிரிவு அதிகாரிகளுக்கு, முழு அதிகாரம் இருக்கிறது; நில ஆவண பதிவேடு, நில அளவைத்துறையில் இருக்கிறது. நகரமைப்பு பிரிவுக்கு கீழ் சர்வேயர் பணிபுரிகிறார்.ஆவண பதிவேட்டில் உள்ள வரைபடத்தை ஆதாரமாகக் கொண்டு, நில அளவீடு செய்து, ஆக்கிரமிப்பை அகற்றாமல், சுற்றுச்சுவரில் பேனர் மட்டும் ஒட்டினால், நிலம் மீட்கப்பட்டதாக அர்த்தமாகுமா என்கிற கேள்வி எழுகிறது.மாநகராட்சி சொத்தை காப்பாற்ற, அதிகாரிகள் பெயரளவுக்கு செயல்படுவது, யாரை திருப்திப்படுத்த என்பதுதான், மர்மமாக உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE