'கேப்டன்' என்றால் சிலருக்கு நடிகர் விஜயகாந்தும், வேறு சிலருக்கு தோனியும் நினைவுக்கு வருவார்கள். ஆனால், ரயில்களிலும் பயணிகளுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காகவே ஒரு 'கேப்டன்' இருக்கிறார் என்பது தெரியுமா!
எம்.ஜி.ஆர்., சென்னை சென்ட்ரல்- திருவனந்தபுரம் அதிவிரைவு ரயிலில் பயணித்தவர்களுக்கு தெரிந்திருக்கலாம். செஞ்சிக்கோட்டையை சேர்ந்த, 'டிரெயின் கேப்டன்' அசோக், இங்கே தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்...!
இந்த வெள்ளை சீருடை 'டிரெயின் கேப்டனின்' பணி என்ன?
டிரெயின் கேப்டன்கள், 2017ம் ஆண்டு முதல் நியமிக்கப்பட்டு வருகின்றனர். பயணிகள் பாதுகாப்புதான் எங்கள் முக்கிய பணி. தெற்கு ரயில்வேயில் முதல் முறையாக, எம்.ஜி.ஆர்., சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம், மேட்டுப்பாளையம் -சென்னை என முக்கிய ரயில்களில், பயணித்தால் எங்களை சந்திக்கலாம்.
பயணிகளுடனான தொடர்பு, ரயில் பயணத்தில் எப்பொழுது ஆரம்பிக்கிறது?
ரயில் புறப்படுவதற்கு, 5 நிமிடத்திற்கு முன் பயணிகள் அனைவருக்கும், என்னுடைய மொபைல் போன் எண், எஸ்.எம்.எஸ்., மூலம் சென்றுவிடும். அதன்பிறகு அழைப்பு வந்துகொண்டே இருக்கும். அனைத்து பெட்டிகளிலும் சோதனை, பயணிகளின் தேவைகள், புகார்களுக்கு தீர்வு காண்பது போன்ற பணிகளை, நாங்கள் 'அட்டென்ட்' செய்ய வேண்டும்.
முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிப்பவர்களை, என்ன செய்வீர்கள்?
முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிப்பவர்களுக்கு, எனது மொபைல் போன் எண் சென்றடையாது என்பதால், நானே நேரடியாகசென்று அவர்களது தேவைகளை கேட்டறிவேன். பண்டிகை சமயங்களில், சிலர் 'டாய்லெட்'டில் கூடஅமர்ந்து பயணிப்பார்கள். அங்குள்ள பயணிகளில் ஒருவருக்காவது எனது மொபைல் எண் கொடுத்து, அவசர கால உதவி, தேவைகளுக்குதொடர்புகொள்ள அறிவுறுத்துவேன். இப்படி செல்லும்போதுஉணவு, தண்ணீர் இல்லாமல் தவிப்பவர்களுக்கு,எனக்கு கிடைத்ததை அளிப்பதுண்டு.
உங்கள் பணியின்போது நிகழ்ந்த, சுவாரஸ்ய சம்பவங்கள் ஏதாவது உண்டா?
எதை சொல்ல, எதை விட...தனித்தனி பெட்டிகளில் பயணிக்கும் கணவன், மனைவியின் ஒருசேர பயண கோரிக்கை, 'அப்பர் பெர்த்' செல்ல முடியாத வயதானவர்களுக்கு, உதவி என நிறைய சம்பவங்கள். ரயில்வே விதிமுறைகளுக்கு உட்பட்டு, என்னால் இயன்ற பல உதவிகளை செய்திருக்கிறேன். அதனால் கிடைக்கும் மகிழ்ச்சியே தனிதான்.
'சீசன்' சமயங்களில் பயணிகள் கூட்டத்தை, எப்படி சமாளிக்கிறீர்கள்?
பண்டிகை, சபரிமலை 'சீசன்' சமயங்களில், முன்பதிவில்லா பெட்டிகளில் கூட்டம் அலைமோதும். ஐயப்ப பக்தர்கள் என்னை போன்றவர்களுக்கு, உணவு பொட்டலங்கள் தருவர். நான் கிடைப்பதை வாங்கிவைத்து, உணவு கிடைக்காதவர்களுக்கு கொடுத்து விடுவேன். ஒரு முறை, 36 பேருக்கு உணவு கொடுத்துள்ளேன்;ஏதோ என்னால் இயன்ற உதவி.
இவ்வளவு பொறுப்பான பணிக்கு, ரயில்வேயில் அங்கீகாரம் வழங்கப்படுகிறதா?
கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் பணியில் இருந்தபோது, ஜோலார்பேட்டை ஸ்டேஷனில் பெண்குழந்தைக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளித்து உதவியமைக்கு, நள்ளிரவில் வயதான பெண்மணியை வீட்டிற்கு அனுப்பிவைத்தமைக்கு... இப்படி நிறைய பேருக்கு உதவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சிறப்பாக பணியாற்றியமைக்கு என, 38 விருதுகளை இதுவரை பெற்றிருக்கிறேன்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE