திருமங்கலம் : நான்குவழிச்சாலையில் டோல்கேட்களை எளிதில் கடக்க எலக்ட்ரானிக் முறையில் பணம் செலுத்தும் பாஸ்ட் டேக் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்ட கவுன்டர்களிலும், டிக்கெட் எடுத்து செல்லும் வாகனங்களை அனுமதிப்பதால் திருமங்கலம் கப்பலுார் உள்ளிட்ட டோல்கேட்களில் அவசரமாக செல்பவர்கள் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மதுரை முதல் கன்னியாகுமரி வரை நான்குவழிச்சாலையை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க திருமங்கலம் கப்பலுார், சாத்துார் எட்டூர், திருநெல்வேலி கயத்தாறு, கன்னியாகுமரி நான்குநேரியில் டோல் பிளாசாக்கள் உள்ளன. கப்பலுார் டோல்கேட்டில் 10 கவுன்டர்கள் உள்ளன. மற்றவற்றில் 8 கவுன்டர்கள் உள்ளன.2019 ஜன., முதல் டோல்கேட்களை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களும் எலக்ட்ரானிக் முறையில் பணம் செலுத்த பாஸ்ட்டேக் ஸ்டிக்கர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த ஸ்டிக்கர்களை வாகனங்களின் முகப்பு பகுதியில் ஒட்ட வேண்டும்.
இதன் மூலம் டோல்கேட்களை கடக்கும் வாகனங்கள் கட்டணம் செலுத்துவது, மீதி சில்லறையை பெறுவது போன்ற இடற்பாடுகள் இன்றி விரைந்து செல்ல முடியும்.அனைத்து வாகனங்களும் பாஸ்ட்டேக் ஸ்டிக்கர்கள் ஒட்ட கெடுபிடி இருந்தது. 2020 ஜன.,ல் இருந்து பாஸ்ட்டேக் ஸ்டிக்கர்கள் ஒட்டாத வாகனங்கள் செல்ல ஒரே ஒரு கவுன்டர் மட்டும் இருந்தது. அந்த வாகனங்கள் பாஸ்டேக் கவுன்டருக்குள் நுழைந்தால் 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின் 3 மாதங்கள் டோல்கேட்கள் இயங்காத நிலையில் தற்போது பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்களும் பாஸ்டேக் கவுன்டர் வழியாக சென்று வருகின்றன. கப்பலுாரில் உள்ள 10 கவுன்டர்களில் 6 அனைத்து வாகனங்களும் செல்ல ஒதுக்கப்பட்டுள்ளது.
4 கவுன்டர்கள் மட்டும் பாஸ்டேக் வாகனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றிலும் பாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லாத வாகனங்களும் அனுமதிக்கப்படுகின்றன. இதனால் நேரத்தை மிச்சப்படுத்த முன்கூட்டியே பணம் செலுத்தி ஸ்டிக்கர்களை ரீசார்ஜ் செய்து வைத்திருந்தும், அந்த வசதியை பயன்படுத்தாத வாகனங்களுடன் வரிசையில் நின்று தாமதமாக செல்லும் பரிதாப நிலைக்கு பாஸ்டேக் வாகனஓட்டிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE