மதுரை:''வாரிசு அரசியலால் நிலவும் உட்கட்சி பூசலை மறைக்கவே மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் பழனிசாமி குறித்து தி.மு.க., தலைவர் ஸ்டாலின், எம்.பி., ஆ.ராஜா போன்றோர் அவதுாறு பேசுகின்றனர்,'' என மதுரையில் பருவமழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்கிய அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை மாநிலத்தில் பரவலாக பெய்து வருகிறது. 36 மாவட்டங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.சீரமைப்பு பணிக்கு ரூ.3700 கோடி மத்திய குழுவிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே ரூ.650 கோடி வழங்கிய நிலையில் மத்திய அரசு மேலும் ரூ.680 கோடி வழங்கியுள்ளது.
மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்கள் குறித்து விவசாயி என்ற முறையில் முதல்வர் பழனிசாமி ஆராய்ந்து ஆதரவு தெரிவித்தார். தமிழக விவசாயிகளும் ஏற்றுகொண்டுள்ளனர். 2016 தேர்தல் அறிக்கையில் தி.மு.க.,வும் இதை வாக்குறுதியாக கொடுத்து விட்டு, தற்போது அரசியல் உள்நோக்கத்துடன் மத்திய அரசுக்கு எதிராக போராடுகிறது. ஸ்டாலின் பகல் வேஷத்தை விவசாயிகள் நம்பமாட்டார்கள்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடுக்கப் பட்டது. ஆனால் எம்.பி., ஆ.ராஜா மீது காங்., ஆட்சி காலத்தில் தான் புகார் தொடுக்கப்பட்டு, அதில் அவர் சிறைக்கு சென்றார். உச்சநீதிமன்றத்தில் 2 ஜி வழக்கு நிலுவையில் இருப்பதை ராஜா நினைவில் கொள்ள வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE