மும்பை:கொரோனா தடுப்பு மருந்துகள், விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதி கிடைத்த பின், குஜராத்தின், ஆமதாபாத், மஹாராஷ்டிராவின், புனே, தெலுங்கானாவின் ஐதராபாத் ஆகிய நகரங்களில், தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் நடைபெற உள்ளன.இந்நிலையில், 130 கோடி மக்கள் வாழும், நம் நாட்டில் நடைபெறவுள்ள, கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள், உலக அளவில், மிகப்பெரிய தடுப்பூசி திட்டமாக கருதப்படுகிறது.
ஆனால், இந்த தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்ற தேவையான, குளிர்சாதன பெட்டக வசதிகள், நம் நாட்டில் இல்லை என, வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இது குறித்து, 'போபா செக்யூரிட்டீஸ்' நிறுவனம் அளித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில், 3.70 கோடி டன் கொள் அளவு கொண்ட குளிர்சாதன பெட்டக வசதி உள்ளது. ஆனால், அவை பல்வேறு இடங்களில், துண்டுதுண்டாக செயல்பட்டு வருகின்றன. மொத்தம், 3,500 நிறுவனங்கள், குளிர்சாதன பெட்டக வசதி வழங்கும் சேவையை அளித்து வருகின்றன.
இதில்,ஒரு நிறுவனத்திடம் கூட,5,000 டன் கொள் அளவுக்கும் அதிகமான பெட்டகங்கள் இல்லை. இதில், மருந்து பொருட்களை வைப்பதற்கு தேவையான, உலக சுகாதார நிறுவன விதிகளுக்கு உட்பட்டு, மிக சில நிறுவனங்களே உள்ளன.'பைசர், மாடர்னா' போன்ற நிறுவனங்களின் தடுப்பூசிகளை, கடும் குளிர் தட்பவெப்ப நிலையில் பராமரிக்க வேண்டும். அதற்கான வசதிகள் இந்தியாவில் குறைவாகவே உள்ளன. எனவே, தடுப்பூசி வழங்கும் பணியில், இது மிகப் பெரிய சவாலை உருவாக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE