ஆனைமலை:''விவசாயிகளுக்கும், மக்களுக்கும் தி.மு.க., எப்போதும் பாதுகாப்பாக இருக்கும்,'' என, ஆனைமலையில் நடந்த விவசாயிகள் சந்திப்பு கூட்டத்தில், எம்.பி., கனிமொழி பேசினார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி, அம்பராம்பாளையம் சுங்கம் அருகே, விவசாயிகள் சந்திப்பு கூட்டத்தில், எம்.பி., கனிமொழி பேசியதாவது:மத்திய அரசின் வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு எதிரானது. இச்சட்டங்களை எதிர்ப்பதுடன், இவற்றை ரத்து செய்ய போராடும் விவசாயிகளுக்கு தி.மு.க., தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கும். இச்சட்டங்களை ஆதரித்த, பா.ஜ., அல்லாத ஒரே முதல்வர் பழனிசாமி தான்.விவசாயிகளுக்கு ஏதேனும் உதவித்தொகை வழங்கினாலும், அதை ஆளும்கட்சியினருக்கு மட்டுமே கிடைக்கும் நிலையை மக்கள் கண்கூடாக காண்கின்றனர்.
விவசாயிகள், மக்களுக்கு எதிரானது அ.தி.மு.க., அரசு; விவசாயிகளுக்கும், மக்களுக்கும் தி.மு.க., எப்போதும் பாதுகாப்பாக இருக்கும். பொள்ளாச்சி, ஆனைமலை பகுதி விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்துள்ளேன். இவற்றை நிறைவேற்றும் வகையில், தேர்தல் அறிக்கை இருக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.
தி.மு.க.,வினரால் வாகன நெரிசல்:
பொள்ளாச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற, கனிமொழிக்கு காந்தி சிலை அருகே, தி.மு.க.,வினர் வரவேற்பு கொடுத்தனர். இதற்காக, ரோட்டின் இருபக்கமும் கட்சியினர் கூட்டமாக காத்திருந்தனர். இதனால், வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்பட்டது.போலீசார் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த திணறினர்.
கோவை ரோட்டில் இருந்து வந்த அரசு பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் செல்ல வழியின்றி நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதை கண்டு கொள்ளாமல் கனிமொழியும், நடு ரோட்டில் வேனில் நின்றபடியே பேசினார். போக்குவரத்து நெரிசலில் நின்ற வாகன ஓட்டுனர்கள் அதிருப்தியடைந்தனர்.'வழக்கமாக போக்குவரத்து இடையூறு இல்லாமல், காந்தி சிலை ரோட்டில் ஒரு பக்கம் மட்டும் கட்சியினருக்கு ஒதுக்கப்படும். ஆனால், தி.மு.க.,வினர் இருபக்கமும் ரோட்டை ஆக்கிரமித்து நின்றதால், ஒட்டு மொத்தமாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE